செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை 
எகிப்தில் நடைபெற்ற கிளர்ச்சியில் முஸ்லிம்  சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உள்பட 682 பேர் வன்முறையில்  ஈடுபட்டதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
எகிப்தில் கடந்த  2011ல் ராணுவத் தலைவரான ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி  முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது மோர்சி தலைமையில், அவர்  சார்ந்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சிக்கு வந்தனர்.  ஆனால், மோர்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை என்பதால் கடந்த ஆண்டு பெரும் கிளர்ச்சி  வெடித்தது.  
 
மோர்சி நீக்கப்பட்டதற்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ  அமைப்பினரும், எதிராக பொதுமக்களும் பெரும் கிளர்ச்சியில்  ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர்  பலியாகினர். 
 
கிளர்ச்சியின்போது வன்முறை மற்றும் படுகொலைச்  செயல்களில் ஈடுபட்டதற்காக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்  தலைவர் முகமது படீய் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர்  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு  நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்நிலையில், கெய்ரோவில்  உள்ள நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கில், தீர்ப்பு  வழங்கப்பட்டது. 
 
இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது படீய்  உள்ளிட்ட 682 பேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.   தீர்ப்பைக் கேட்பதற்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும்,  ஆண்களும் தண்டனையைக் கேட்டதும் கதறி அழுதனர். 
 
இதே  நீதிமன்றத்தில் கடந்த மாதம், வேறொரு வழக்கில் 529 பேருக்கு  மரணதண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இதே நீதிமன்றம், மரணதண்டனை பெற்ற அனைவருக்கும்  தண்டனைக்குறைப்பு செய்தது. பெரும்பாலானோருக்கு ஆயுள்  தண்டனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக