புதன், 30 ஏப்ரல், 2014

பிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கொலை செய்ய இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
1993 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச தற்கொலை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
கொழும்பு, ஆமர் வீதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து பிரேமதாச பயணிக்கும் வாகனத்தின் மீது தற்கொலை குண்டுதாரி குதித்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக பயங்கரவாத விசாரணை அதிகாரியான எம். நிலாப்தீன் தயாரித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைத் திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோசப் நிக்சன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திட்டம் அம்பலமாகியது.
நிலாப்தீன் கண்டுபிடித்த இந்த தகவல் பிரேமதாச கொல்லப்பட்டு 21 வருடங்களின் பின்னர் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நிக்சன் மற்றும் பிரேமதாச மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய பாபு என்ற நபருக்கு இடையில் நடந்த சந்திப்பின் பின்னர் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரேமதாச மூடிய வாகனம் ஒன்றில் பயணித்தால், மேல் இருந்து வாகனத்தின் மீது குதிக்கும் முயற்சி தவறக் கூடும் எனவும், இதனால் இலக்கு மீதான குறி தவறி போகும் எனவும் நிக்சன் குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி தகவல்களை நிலாப்தீன் கண்டறிந்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
1993 ம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலகத்தில் ஆமர் வீதி பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தற்கொலை குண்டுதாரியினால் கொலை செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு உயிராபத்து இருப்பதாகவும், இதனால் மே ஊர்வலம் போன்ற பகிரங்க ஊர்வலங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவரது ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் தான் இல்லாத மே தின ஊர்வலமா? என கூறிய பிரேமதாச அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது.  எவ்வாறாயினும் பிரேமதாசவின் கொலையில் அரசியல் பின்னணிகளும் இருப்பதாக அப்போது பேசப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய அன்றைய முக்கிய அமைச்சர் ஒருவருக்கும், இந்த கொலையில் சம்பந்தம் இருப்பதாகவும் அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவின் உதவியோடு, இந்த கொலை நடைபெற்றதாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் சிரார்த்த தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.  கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாக பகுதியில் இருக்கும் அவரது உருவச்சிலை அருகில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக