புதன், 30 ஏப்ரல், 2014மிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்டது போல அமைந்துவிட்டது, உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி சதாசிவம் பெஞ்ச்சின் அந்தத் தீர்ப்பு!

மரண தண்டனை ஒழிப்புக்கு முன்னோடியாக அமையக் கூடிய தீர்ப்பைத் தந்த நீதிபதி சதாசிவத்தை உச்சிமோந்து கொண்டாடிய இன உணர்வாளர்கள், இன்றைக்கு அதிர்ச்சியில் உறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவரா இவர்? என வியப்பின் விளிம்பில் வெதும்பிப் போய் கிடக்கிறார்கள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள். 

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் விடுவிப்பு தொடர்பான வழக்கில், கடந்த 25ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும் என முந்தைய நாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதில் இருந்து தமிழின உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பரவசம் அடைந்தனர். நல்ல தீர்ப்புதான் வரும் என நம்பிக்கையோடு பெரும்பாலான வர்கள் உறுதியாக இருந்தார்கள்; எதுவும் பாதகமாக நடந்துவிடக்கூடாது என இறைபக்தியுள்ள இன உணர்வாளர்கள் வேண்டியபடி இருந்தனர். கணிசமான வர்கள் மனதில், எக்குத்தப்பாக எதுவும் நடந்துவிடுமோ என அச்சத்தில் உள்மனம் அரற்றியது. 

இணையத்தில் நட்பூடகங்களில் புழங்கும் உலகத் தமிழர்கள், உணர்ச்சிமயமாகப் பொங்கியபடி இருந்தனர். முத்துக்குமாரின் தற்கொடைச் சாவுக்குப் பிறகு, இன உணர்வாளர்களாகப் பரிணமித்த தமிழக இளைஞர்களிடம், அளவுக்கு மீறிய இன உணர்வு ஆவேசம் தெறிக்கிறது. சூடாகும் இரத்தத்தோடு கனன்றுகொண்டு இருக்கும் அவர்களின் மனதும் உடலும் நிலைகொள்ளவில்லை. இணையத்தில் எழுதும் பழக்கம்கொண்டவர்கள், ஜாமம் கடந்த இரவிலும் தூக்கம் வரவில்லை எனக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். அதிலும் அரசியல் பார்வையோடு கவித்துவமாகவும் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வைக்கவும் சிலர் தவறவில்லை. 

மிகவும் எளிமையான சொற்களில் கருத்துகளைப் பதிவுசெய்யும் ஆடுதுறை குமரவேல் எனும் உணர்வாளர், "நாளைய விடியல், எம் இனத்தின் விடியலாக இருக்கவேண்டும். இனத்தின் இருளை நீக்கி 23 ஆண்டுகள் கழித்து வெளிவரும் எங்கள் குல விளக்குகளே... உங்கள் வருகையை எதிர்நோக்கி தம்பிகள்'’என வரிசையாக எழுதியபடி இருந்தார். 

பன்னாட்டு உணர்வாளர்களின் பரவச வெளிப்பாடுகள் ஒருபக்கம் இருக்க, சென்னையில் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கில், தீர்ப்பை வரவேற்கக் காத்திருந்தது, உணர்வாளர் கள் பட்டாளம். கூடவே, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் இருந்தார். பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் செங்கொடி அரங்கத்தை நோக்கிச் சென்றவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரை யும் ஒரு நொடியில் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்திய ஒரு தீர்ப்பைத் தந்தது, தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று பேர் அமர்வு. 

இருபத்து நான்கு மணி நேரத்தில் எல்லாமே அங்கு தலைகீழாய் மாறிப்போனது. செங்கொடி அரங்கத்தில் திரண்ட இன உணர்வாளர்களும் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத் தினரும் மனம் நைந்து நொந்துபோனார்கள். 23 ஆண்டுகளாக மனஉறுதியோடு மரண தண்ட னைக்கு எதிராகப் போராடிவரும் 70 வயது அற்புதம் அம்மாள், இதற்கு முன் அப்படிக் கலங்கியதை இனஉணர்வாளர்கள் கண்டதில்லை; கேள்விப்பட்டதுகூட இல்லை. 

உச்சகட்டத் துயரம் தாக்கியவர்களாக உடைந்துபோன உணர்வாளர்கள், முந்தின நாள்வரை பல வேலைகளைத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். சிறையில் வெள்ளை உடையில் இருக்கும் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்படுவதாக இருக்க... அப்போதே, அவருக்கு சென்னையில் இருந்து கட்டம்போட்ட சட்டை ஒன்றை வாங்கி, தயாராக வைத்திருந்தார்கள், அவரின் உறவினர்கள். சிறையில் இருந்து பேரறிவாளன் விடுதலையாகி வந்தவுடன் முதலில், காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் உள்ள இளம்பெண் செங்கொடி நினைவிடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்; சென்னைக்கு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்யவேண்டும்; மரணதண்ட னைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு நன்றி தெரிவிக்க கூட்டிச்செல்ல வேண்டும் என வரிசையாகப் பட்டியலிட்டு இருந்தனர்.

ஆனால், இவை எல்லாவற்றையும் தவிடுபொடி யாக்கிவிட்டது, ஏப்ரல் 25ஆம் தேதியன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. மூன்று பேரின் விடுவிப்பு பற்றிய வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றிய சதாசிவம் பெஞ்ச்சானது, புத்தம்புதிதாக ஏழு கேள்விகளை எழுப்பியதும், அதிலும் முதல் கேள்வியாக, ஆயுள் தண்டனைக் காலம் எவ்வளவு என்பதைப் பற்றி வரையறுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! 

வாழ்நாள் முடிவதற்குள் தன் மகனை விடுவிக்க மட்டுமல்ல, மரணதண்டனையை விட்டொழிக்கவும் போராடும் அற்புதம் அம்மாளிடம் பேசினோம். தீர்ப்பு வந்தவுடன் சிறையில் இருக்கும் தன் மகன் பேரறிவாளனைச் சென்றுபார்த்துவிட்டு வந்த அவர் நம்மிடம்... 

""மூணு நாள்ல தீர்ப்பு வரும்னு 22-ஆம் தேதி சொல்லிட்டு, இப்படி மடைமாத்தி விட்டுட்டுப் போய்ட்டாரேப்பா. எந்த குற்றமும் செய்யாத என் பிள்ளையை 23 வருசமா தண்டிச்சுகிட்டு இருக் காங்களே.. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த வழக்கை உயிரோட்டமா வச்சிருக்கணும்னு நினைக்கி றாங்க? நாங்க சட்டரீதியான போராட்டம்தானே நடத்திட்டு வரோம். எவ்வளவு பெரிய ஏமாற்றம் இது? கோடிக்கணக்கான மக்கள் இவங்களை விடுதலை செய்யணும்னு வலியுறுத்துற இந்த வழக்கிலேயே இப்படின்னா, கவனம் பெறாத சாமானியர்களுக்கு எப்படிப்பா நீதி கிடைக்கும்? தொடர்ந்து சட்டரீதியாவே இதை அணுகுவோம்; இதன் மூலமா என்னைப் போல எத்தனையோ பேரோட வாழ்க் கையில் விடிவு வரணும்னு உறுதியா இருக்கேன்ப்பா. மூணு பேரையும் விடுதலை செய்றதுக்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டுனு, முதலமைச்சர் அம்மாவும் உறுதி சொல்லியிருக்காங்கதானே... நம்பிக்கையோட இருக்கோம்ப்பா''’என்றவரின் சொற்களில், இன்னும் தளராத மன உறுதி மட்டும் பளிச்...பளிச். 

-இரா.தமிழ்க்கனல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக