புதன், 30 ஏப்ரல், 2014
மோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என்று இவற்றைச் சொல்லலாம். பெரும்பாலான தொகுதிகளில் தாமரையைப் பூக்கச் செய்யலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. 

மகாராஷ்ட்ரா


இந்தியாவை 10ஆண்டுகாலம் காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆட்சி செய்ததால் அதன் மீது நாடு தழுவிய அதிருப்தி நிலவுவதுபோல, 48 எம்.பி. தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட் ரா மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளித்த மாநில மக்கள் இப்போது அந்தக் கூட்டணி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆதர்ஷ் ஊழ லில் தொடங்கி எதிர்க்கட்சிகள் விளாசு வதற்கு நிறைய வாய்ப்புகளை இந்தக் கூட்டணி உருவாக்கிக்கொடுத்துவிட்டது.

மராட்டிய மாநிலத்தின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் என்றாலும் வெற்றிவாய்ப்பு குறைவுதான் என தேர்தல் களம் விறுவிறுப்படையும் முன்பே சொல்லிவிட்டார். மோடியை சரத்பவார் சந்தித்ததும் அது தொடர்பாக அவர் அளித்த விளக்கங்களும் பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக்கொண்டு வரும் எண்ணம் ராகுலிடம் இல்லை. அவருடைய பிரச்சாரம் அப்படித்தான் இருக்கிறது என்றும் சரத்பவார் ஓப்பனாகவே சொன்னார்.

இந்தச் சூழல்களெல்லாம் பா.ஜ.க-சிவசேனா கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. சிவசேனாவிலிருந்து பிரிந்து நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தும் பால்தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரேவும், பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் மோடி தரப்புக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார். மோடி பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை இந்த மாநிலத்தில் உள்ள 40% பேரிடம் இருப்பதாகவும், ராகுலுக்கான ஆதரவு 15% பேரிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மகாராஷ்ட்ராவில் ஆம் ஆத்மியும் இம்முறை களமிறங்கியுள்ளதால் அதனால் பா.ஜ.க.வின் வெற்றி வேகம் சற்று தடைபடும் என்றும் தெரிகிறது. மூன்று கட்டங்களாகத் தேர்தலை சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க அதிகபட்சமாக 30 சீட்டுகளை எதிர்பார்க்கிறது. காங் கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட் டணி 15 சீட்டுகளையாவது பிடித்துவிடவேண்டும் என நினைக்கிறது. ஆம் ஆத்மி 3 சீட்டுகள் வரை எதிர்பார்க் கிறது.

குஜராத்


நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை வென்று முத லமைச்சராக உள்ள குஜராத்தான் இந்தியா வுக்கான ரோல் மாடல் மாநிலம் என்று பிரச் சாரம் செய்து, அதனடிப் படையிலேயே பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன்னிறுத்தப் பட்டுள்ளார். உ.பி மாநிலம் வாரணாசி தொகுதியில் தன்னை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் நிற்கிறார் என்றதுமே பாதுகாப்பாக தனது மாநிலத்தில் உள்ள வதோதராவிலும் போட்டியிடு கிறார் மோடி. அந்த பாதுகாப்பு, குஜ ராத்தின் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு கிடைக்குமா என்றால் பா.ஜ.க தலைவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் தரப்பிலும் வெற்றி மீதான நம்பிக்கை  இல்லை.

""இத்தனை காலமா வெளியே தெரியாம மறைச்சி வச்சிருந்த தன்னுடைய மனைவியை மோடி இந்த முறைதான் வெளிப்படுத்தியிருக்காரு. இதுபோல அவர் பல உண்மைகளை மறைச்சி போலியா விளம்பரம் தேடிக்கிறாரு. வளர்ச்சின்னு அவர் சொல்றது ஏழைகளுக்குப் போய்ச் சேரலை. முஸ்லிம்கள், தலித் மக்கள் மோசமான நிலையில் இருக்காங்க. 

ஆனா, அதை எங்களால மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்து ஆதரவு தேட முடியலை. இதில் நாங்க தொடர்ந்து தோல்வியடைஞ்சுக்கிட்டிருக்கோம்'' என்கிறார் குஜராத் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். 

தனக்கு சமமான எதிரிகள் இல்லாதபடி எதிர்க்கட்சியில் மட்டுமின்றி சொந்தக்கட்சியிலும் கவனமாக செயல் படுவது மோடியின் பலம். வலிமையான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் மொத்த தொகுதிகளையும் அள்ள நினைக்கிறது பா.ஜ.க. நான்கைந்து தொகுதிகளையாவது ஜெயிக்கவேண்டும் எனப் போராடுகிறது காங்கிரஸ். மோடி கோட்டையில் ஓட்டை போடவேண்டும் என ஆம் ஆத்மி நினைக்கிறது.

மத்திய பிரதேசம்

இதுவும் பா.ஜ.க தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் மாநிலம். காங்கிரசில் திக்விஜய்சிங், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற சீனியர்-ஜூனியர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தாலும் பா.ஜ.க.வின் வலிமையை 29 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் தகர்க்க முடியவில்லை. 

மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மோடியின் குஜராத்துடன் ஒப்பிடுகையில் மத்தியபிரதேசம் பல துறைகளிலும் உண்மையாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆர்ப்பாட்டமில்லாமல் அரசியல் செய்து கட்சியைப் பலப்படுத்தியிருப்பவர் சவுகான் என்கிறார்கள் மத்தியபிரதேச மாநில அரசியல் பார்வையாளர்கள். ஆம் ஆத்மிக்கு மத்திய பிரதேசத்தின் மீது கண் இருந்தாலும் இங்கு அதனால் இன்னும் சரியாக வேர் விட முடியவில்லை. 

சட்டமன்றத் தேர்தல் போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தலைகளின் வெற்றியையாவது உறுதி செய்யவேண் டும் என காங்கிரஸ் நினைக்கிறது. பா.ஜ.க. மொத்த தொகுதி களையும் குறிவைக்கிறது. 29-ல் 22-க்கு குறையாமல் தாமரை பூக்கும் என நம்பிக்கை யுடன் இருக்கிறார்கள்.

ராஜஸ்தான்


இரண்டு கட்டங் களாக ஏப்ரல் 17, 24 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் டெல்லி, மத்தியபிரதேசம் மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தபோதுதான் ராஜஸ் தான் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றிபெற, ராஜ வம்சத்தை சேர்ந்தவரான வசுந்தரராஜ சிந்தியா முதல்வரானார். எதிர்பார்த்த அளவிற்கு சிந்தியாவின் ஆட்சியில் திட்டங்கள் வேகம் பெறவில்லை என்றாலும் பா.ஜ.கவின் செல்வாக்கு குறையவில்லை.

""அதற்குள்ளாகவா எம்.பி. எலெக்சன் வரணும்? ஒரு ஆறு மாசம் கழிச்சி வந்திருந்தாகூட ஓரளவு சமாளிச் சிருப்போம்'' என்கிறார்கள் ராஜஸ்தான் காங்கிரஸ் நிர்வாகிகள். ஆனாலும் 5 தொகுதிகளையாவது ஜெயித்துவிடவேண்டும் என வேலை செய்து வருகிறார்கள். மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் தொடர்ச்சியாகவும், மோடி அலை யாலும் தங்களுக்கு எப்படியும் 20 தொகுதிகள் நிச்சயம் என்கிறது பா.ஜ.க தரப்பு.

சட்டீஸ்கர்


""மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் உள்ள மாநிலம் என்பதால் இங்குள்ள 11 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவு சமயத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதால் மாநிலத்தில் பதற்றத்திற்கு பஞ்சமில்லை. பேருக்குத்தான் இங்கே ஆட்சி, போலீசெல்லாம் காவிக் கட்சி கையில்தான். ஆனா, உள்ளூர் நிர்வாகம் சிவப்புக் கொடிக்காரங்ககிட்டதான். அவங்க வச்சதுதான் சட்டம்'' என்கிறார் சுக்மா மாவட்டம் தர்பா பள்ளத்தாக்கைச் சேர்ந்த சஞ்சீவ்குமார்.

இந்த நிலைமைக்கு மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் அதிருப்தியை தணிக்கும் நடவடிக் கைகளில் சட்டீஸ்கர் மாநில பா.ஜ.க முதல்வர் ராமன்சிங் கெட்டிக்காரர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டபோது அதைப் பார்த்து சட்டீஸ்கரில் அமல்படுத்தியவர் அவர். அதனால்தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தலைமையிலான பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ராமன்சிங்கின் செல்வாக்கை காங்கிரசின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி போன்றவர்களால் வீழ்த்த முடியாத நிலையே நிலவுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 9ல் தாமரை பூக்கும் என பா.ஜ.க எதிர்பார்க்க, 2 தொகுதிகளாவது கை கொடுக்கும் என நினைக் கின்றனர் காங்கிரசார்.

உத்தரகாண்ட்


காங்கிரஸ் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் மொத்த எம்.பி. தொகுதிகள் 5. இமாலய சுனாமி என்ற பெருவெள்ளம் வந்தபோது இங்கு சிக்கிய குஜராத்தியர்களை ஹீரோ  போல மோடி காப்பாற்றியதாக இமேஜ் டெவலப் செய்யப்பட்டது. காங்கிரஸ் முதல்வர் விஜய் பகுகுணா ராஜினாமா செய்ய, அதே கட்சியின் ஹரிஷ் ரவத் முதல்வரானார். உள்கட்சி குழப்பங்கள், நிர்வாக சீர்கேடு களால் காங்கிரஸ் தள்ளாட, எம்.பி. தேர்தலில் ஐந்தையும் வெல்ல நினைக்கிறது பா.ஜ.க. ஒன்றாவது ஜெயித்தால்தான் மரியாதை எனப் போராடுகிறது காங்கிரஸ்.

கோவா

இந்தியாவின் சிறிய மாநிலமான இங்கு 2 தொகுதிகள். பா.ஜ.க முதல்வர் மனோகர் பரிக்கர்தான் ஆட்சி செய்கிறார். மாநில வளர்ச்சிக்கானத் திட்டங்களை முன்வைத்து இரண்டு தொகுதிகளையும் ஜெயிக்கலாம் என நினைக்கிறது பா.ஜ.க

-பா.ஜ.கவுக்கு நம்பிக்கை தரும் இந்த மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகள் 146. இதில் 125க்குக் குறையக்கூடாது என பா.ஜ.க கணக்குப்போட்டுள்ளது. மோடியை பிரதமராக்க இந்தக் கணக்குப் போதுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக