புதன், 30 ஏப்ரல், 2014


தி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம். உற்சாகமாக பதில் தந்தார் துரைமுருகன்.


தமிழகம் முழுவதும் மும்முனை போட்டியும் சில இடங்களில் ஐந்து முனை போட்டியும் நடந்துள்ள இந்த தேர்தலில், தி.மு.க.விற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என நீங்கள் கணக்கிட்டிருக்கிறீர்கள்?  


எனக்கு கிடைக்கிற தகவலின் அடிப்படை யில் தி.மு.க.விற்கு 15 முதல் 20 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும். இது தவிர, தி.மு.க.வின் தோழமைக்கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெறும். அந்த வகையில் தி.மு.க. கூட்டணிக்கு 22 தொகுதிகள் கிடைக்கும். இது என் தனிப்பட்ட கணக்கு.

தேர்தலுக்கு கடைசி இரண்டு நாளில் ஆளும் கட்சி நடத்திய பண உற்சவத்தில், தி.மு.க.வின் வெற்றி கேள்விக்குறியாகி யிருக்கிறது என்கிறார்களே?

வாக்காளர்களை ஆளும் தரப்பு விலை கொடுத்து வாங்கியதால் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் வெற்றியை தடுத்து நிறுத்திவிட முடியாது. தமிழகத்தில் ஏதேனும் சில இடங்களில் இந்த விவகாரம் சிறிய பாதிப்பை ஏற்படுத்தலாமே தவிர எங்களின் வெற்றியை முழுமையாக சேதப்படுத்திட வாய்ப்பே இல்லை. இன்றைக்கு மக்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். இதனை தேர்தல் களத்தில் நேரடி யாகவே உணர்ந்தவன் நான். ஜெயலலிதாவின் 3 வருட கால ஆட்சியில் சாதாரண மக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தவர்கள். இன்னும் அனுபவிக்கப்போகிறவர்கள். அதனால் ஆளும் கட்சி மீதான அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாகவே கனன்றுகொண்டு தான் இருக்கிறது. அவர்களின் கோபத்தை தணிக்கவும் அதிருப்தியை போக்கவும்தான் பண விளையாட்டை விளையாடினர். ஆனால், 200 ரூபாய்க்கெல்லாம்  மக்கள் மயங்கி விடவில்லை. மயங்கி விட்டதாகவும் நான் கருதவில்லை.

தமிழகத்தின் நகர பகுதிகளைவிட கிராமப்புறங்களில் வாக்கு சதவீதம் அதிகரித் திருப்பது பண விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றும், அது ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றும் சொல்லப் படுகிறதே? 

தற்போதைய தேர்தலில் 73 சதவீதம் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 79, 80 சதவீதமெல்லாம் பதிவானதுண்டு. அதனால், என்னைப் பொறுத்தவரை 73 சதவீதம் என்பது இயல்பானதுதான். அதிகம் என்று சொல்லிவிட முடியாது. ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு, எரிச்சல், அவர்களை தோற்கடிக்க வேண்டுமென்கிற வைராக்கியம் ஆகியவை உந்தித் தள்ளியதால் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் வாக்கு சாவடிக்கு வந்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். இந்த உற்சாகம் எந்த வகையிலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்காது.

""ஒரு பகுதியில் அ.தி.மு.க. ஒரு கொடிக்கம்பம் நட்டு வைத்தால் அடுத்த நாளே அந்த கொடிக் கம்பத்திற்கு பக்கத்திலேயே தி.மு.க.  கொடிக் கம்பத்தை  நட்டு வைப்போம். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் அ.தி.மு.க.வுக்கு சவால் விடுகிற மாதிரிதான் அரசியல் செய்துகொண்டிருக் கிறோம். அந்த வகையில் தேர்தல் வெற்றிக்காக அ.தி.மு.க. பணத்தை அள்ளி வீசும்போது நாமும் அதேபோல அள்ளிவீச வேண்டாமா? பண விளையாட்டில் அ.தி.மு.க.வோடு தோற்றுப் போய்விட்டோம்'' என்று தி.மு.க. தொண்டர் களிடம் ஒரு சலிப்பு எதிரொலிக்கிறதே?


கழகத் தோழர்களின் தேர்தல் பணிகளுக் கான செலவு தொகை தருவதில் நாங்கள் குறை ஏதும் வைக்கவில்லை. தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல் யாரிடமும் சோர்வு  வந்து விடக்கூடாது என்பதை உணர்ந்து கழகத் தோழர்கள் உரிய முறையில் கவனிக்கப்பட்டி ருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் கட்சி செலவுகளை ஏற்பது என்பது வேறு ; ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது வேறு. தொடக்கத் தில் இருந்தே ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்பதில் தலைவரும், தளபதியும் உறுதியாக இருந்தார்கள். தனது சுற்றுப்பயணத்தில் கழக நிர்வாகிகளிடம் இதனை தெளிவுபட விளக்கி யிருக்கிறார் தளபதி. அதனால் தி.மு.க. தொண்டர்களிடம் தேர்தல் பணியில் எந்த சோர்வும் எனக்கு தெரிந்த வரையில் இல்லை. 1967 முதல் அனைத்து தேர்தல் கால பணிகளில் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், எந்த தேர்தல் நேரத்திலும் இல்லாத அளவுக்கு இந்த முறை கழகத் தொண்டர்களிடம் எழுந்த உற்சாகமும் எழுச்சியும் வேகமும் அளவிடற் கரியது. ஓட்டுக்கு பணம் இல்லை என்று தலைமையிலிருந்து சொல்லப்பட்டப் பிறகும் அந்த உற்சாகமும் எழுச்சியும் குறையவில்லை என்பதுதான் தி.மு.க.வின் வலிமை. தலைவர் கலைஞரின் 3 கட்ட சுற்றுப்பயணத்தில் தொண்டர்களின் உற்சாகம் ஒரு சுனாமி எழுச்சியை உருவாக்கியதே இதற்கு சாட்சி.

பிரச்சாரம் முடிந்ததும் 144 தடை உத்தரவை 36 மணி நேரம் தேர்தல் ஆணையம் அமல் படுத்திய விசயத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


இது தேவையற்ற ஒன்று. தேவையற்ற ஒன்றுக்கு தேவைபோல அமல்படுத்தியதுதான் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியின் பின்னணி இருக்கும் என்பது என் குற்றச்சாட்டு. தங்களுக்கான வெற்றி எப்படி இருக்கும் என்று பல கட்டமாக பல ரிப்போர்ட்டுகளை  எடுத் திருக்கிறது ஆளும் தரப்பு. எந்த ரிப்போர்ட்டும் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் வாக்காளர்களை வளைக்க போலீஸ் படை சூழ பணப்பட்டுவாடா பரிவர்த்தனையை ஆரம்பத் திலிருந்தே செய்தனர். அப்போதும் அவர் களுக்கு திருப்தி கிடைக்கவில்லை. அதனால், கடைசி கட்ட விநியோகத்தை செய்ய திட்ட மிட்டனர். பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பார்வையும் ஆளும் கட்சிக்காரர்கள் மீதே இருக்கும் என்ப தாலும் அதனால் தங்கள் இலக்கை அடைவதில் சிரமம் இருக்கும் என்பதாலும் உணர்ந்தே இந்த 144-ஐ அழைத்துக் கொண்டனர். 144-ஐ இப்படித் தான் கணிக்க வேண்டியிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லாதது தி.மு.க.வின் வெற்றியை பலகீனப்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் தோழர்கள் சொல்கிறார்களே?

காங்கிரஸ் இருந்திருந்தால்தான் தி.மு.க. பலகீனப்பட்டிருக்கும். காங்கிரஸ் மீதான வெறுப்பு கழகத் தோழர்களிடம் மட்டுமல்ல; தமிழக மக்களிடமும் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணியின் வலிமை தி.மு.க.வுக்கு சாதகமா? பாதகமா?


பா.ஜ.க. என்பது தமிழகத்தில் நடக்க முடியாத ஒரு கட்சி. பல கட்சிகளின் தோளில்தான் ஏற வேண்டும். அதனால் இந்த தேர்தலில், ஏறிப் பழகியிருக் கிறது. தமிழகம், தந்தை பெரியா ரால் வார்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவு பூமி. சுயமரியாதை சூழல் விளைந்த மண். இங்கு மதவாத சக்தியான பா.ஜ.க. வேரூன்றிவிட முடியாது. அதனால், எத்தனை கட்சிகளோடு கூட்டணி வைத்தாலும் அவ்வளவு எளிதாக தி.மு.க.வை ஜெயிக்க முடியாது. பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள் அ.தி.மு.க.விலிருந்து பிரியும் வாக்குகள் என்பதாலும் அ.தி.மு.க.வுக்கு விழ வேண்டிய வாக்குகள் என்பதாலும் மூன்றாவது அணி அ.தி.மு.க.வுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். 

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால்  ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?


குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்கும் விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். ஜெயலலிதா பதவியேற்பு வைபவத்தில் மோடி கலந்துகொள்கிறார். கார்டனுக்கு அழைத்து மோடிக்கு விருந்தும் தருகிறார் ஜெயலலிதா. அவர்களுடைய அரசியல் நட்பு அப்படிப்பட்டது. பரஸ்பரம் தங்களின் நட்பை இருவரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கையாகவும் இருக்கிறது. இரண்டுக்கும் பெரியளவில் வித்தியாசம் கிடையாது. அதனால், மோடி ஆட்சி அமைந்தால் அதில் நிச்சயம் ஜெயலலிதா பங்கேற்பார். தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் மோடியை விமர்சித்ததெல்லாம் மக்களை ஏமாற்றும் தேர்தல் நேரத்து மாய்மாலம். ஆனால் மோடியின் கவலையெல்லாம், ஜெயலலிதா அதிக இடங்களில் ஜெயிக்கக்கூடாது என்பது தான். 20, 25 எம்.பி.க்கள் ஜெயலலிதாவுக்கு கிடைத்து அவர் மத்திய ஆட்சியில் பங்கேற்றால் நம்மால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாது என்பது தான் மோடியின் பயமும் கவலை யும். ஆக, ஜெயலலிதா ஜெயிக் கணும்; ஆனா, அதிக இடங்களில் ஜெயிக்கக்கூடாது என்பதே மோடியின் சிந்தனை.

ஏழுபேரும் விடுதலையாகி விடுவார்கள் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில், அவ்வழக் கினை அரசியல் சாசன பெஞ்சுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்திருக்கிறதே?

எந்த ஒரு வழக்கு பற்றியும் பொதுவெளியில் நீதிபதிகள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக் கூடாது. பகிர்ந்துகொள்வது ஆரோக்கியமானதல்ல. ஆனால், அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிக் கும் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சதாசிவமே, "நல்ல தீர்ப்பு வரும்' என்று சொன்னது நீதித்துறைக்கு உகந்ததல்ல. இதைத்தான் தலைவர் கலைஞர் எடுத்துச் சொல்லியிருந்தார். ஒரு வழக்கின் தீர்ப்பு பற்றி பொதுவெளியில் கருத்துச் சொல்லக்கூடாது என்பது சதாசிவத்திற்கு தெரிந்திருந்தும், தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். நல்ல தீர்ப்பு வரும் என்றார். அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்பி வைப்பது தான் நல்ல தீர்ப்பா? இதனைத் தாண்டி எதையும் விமர்சிக்க விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக