புதன், 30 ஏப்ரல், 2014




காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ மேஜர் முகுந்த், 27-ந் தேதி சென்னைக்குத் திரும்பினார்... உயிரை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு, சடலமாக. 


காஷ்மீர் மாநில சோபியன் மாவட்டத்தில் இருக்கும் ராணுவ கேம்ப்பில், 44-வது ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் மேஜர் முகுந்த்தும் ஒருவர். 25-ந் தேதி காலை பெங்களூரில் இருக்கும் தனது காதல் மனைவி இந்துவைத் தொடர்பு கொண்ட முகுந்த், ""கேம்ப்ல இருக்கோம். எலக்ஷன் நேர பதட்டம் இன்னும் இருக்கு. நான் தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு மே 20-வாக்குல ஊருக்கு வருவேன். சென்னைக்குப் போய் அப்பா, அம்மாவைப் பார்க்கணும். சரி... குட்டிம்மா அர்ஷியா எப்படி இருக்காங்க?. பார்த்துக்க. பை''’என்றார் நெகிழ்ச்சியாய். 

அன்று மாலை 6 மணியளவில், ‘மில்டன் குரூப் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கரோனா மலினோ பகுதியில் தங்கியிருப்பதாக ஒரு தகவல் வர, இந்த ராணுவப்படை விரைந்து சென்றது. அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் முற்றுகையிட, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் விடாமல் சுட... பனித் துகள்கள் சிதறின. இதில் ஒரு தீவிரவாதி, குண்டடிபட்டு அப்படியே சுருண்டு விழுந்தான். அவன் உடலில் அசைவு எதுவும் இல்லை. 

முகுந்த்தும் மற்றவர்களும் அடுத்தடுத்த தீவிரவாதிகளைக் குறிவைக்க, அப்போது சுருண்டு விழுந்து கிடந்த அந்தத் தீவிரவாதி குபீரென புரண்டு படுத்தபடி, முகுந்த்தை நோக்கி சுடத்தொடங்கினான். குண்டு முகுந்த்தின் மார்பிலும் விலாப்புறத்திலும் ஊடுருவ, அந்த மரண நொடியிலும், அந்தத் தீவிரவாதி யை சுட்டு வீழ்த்தியபடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் முகுந்த். ரத்தக் களறியாய் கீழே விழுந்தவரை, சக ராணுவ வீரர்கள் மீட்டு, ராணுவ மருத்துவ கேம்ப்புக்கு அனுப்பிவைத்தனர். போகும் வழியிலேயே அந்த இளம் ராணுவ வீரனின் உயிர்த்துடிப்பு அடங்கிவிட்டது. இந்தப் போரில், மூன்று தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். முகுந்த்தைப் போலவே ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரையும் நாம் இழக்க நேர்ந்தது.

முகுந்த் இறந்த செய்தி, சென்னை கிழக்குத் தாம்பரம் புரப்பர்ஸ் காலனி, பார்க் அவென்யூ அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பி-7 எண்ணுள்ள, முகுந்த்தின் வீட்டுக் கதவைத் தட்டிய நொடியி லேயே, தாம்பரம் பகுதியே துக்கக் காடானது. முகுந்த்தின் அம்மா கீதா கதறியழ... கண்ணீர் வடித்தபடியே இருந்த அப்பா வரதராஜனை நெருங்கினோம். நம் கைகளைப் பற்றிக்கொண்டார். அவரிடம் முகுந்த் பற்றி கேட்டதும், ‘""நான் ஐ.ஓ.பி.யில் மேனஜரா இருந்து ரிட்டையர்ட் ஆனவன். முகுந்த் எங்களுக்கு ஒரே மகன். ரொம்ப சூட்டிகையானவன். அடுத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டவன். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியல் முடிச்சான். பிறகு தாம்பரம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்தான். "நாட்டுக்காக ஒர்க்பண்றதில் ஒருவித திருப்தி கிடைக்குதுப்பா'ன்னு சொல்வான். கடைசியா போன 19-ந் தேதி அன்னைக்கு, எனக்குப் பிறந்தநாள் என்பதால் பேசினான். வாழ்த்து சொல்லிட்டு உடம்பை பார்த்துக்கங்க. சீக்கிரம் வர்றேன்னான். இப்படி ஆகும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை. நாட்டுக்காக அவன் உயிர் கொடுத்திருக்கான்ங்கிறது சோகத்திலும் பெருமிதமா இருக்கு''’என்றவர் வாயைப் பொத்திகொண்டு அழுதார். 

முகுந்த்தின் உடல் 27-ந் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வர, அதை  பரங்கிமலை ராணுவ மருத்துவ மனையில் வைத்திருந்தனர். 28-ந் தேதி காலை 9 மணிக்கு அவரது உடல், கிழக்குத் தாம்பரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமான பொதுமக்களும் சமூக சேவை அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தமிழக அரசு அறிவித்த 10 லட்சம் உதவித் தொகையை, கலெக்டர் பாஸ்கரோடு வந்து, குடும்பத்தினரிடம் வழங்கினார் அமைச்சர் சின்னையா. சமூக சேவகர் அக்பர், பொறியாளர் சாமு வேல் உள்ளிட்டோர் முகுந்த்தின் வீரமிகு தியாகத்தையும் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் நம்மிடம் பகிர்ந்தனர். பார்க் அவென்யூ குடி யிருப்போர் சங்க தலைவர் முத்துலிங்கமோ, ""முகுந்த்தை டிராயர் போட்ட பருவத்திலிருந்து பார்க்கிறேன். ரொம்ப துடிப்பானவர். லீவில் வரும் போதெல்லாம் ராணுவத்தில் நடந்த சுவையான அனுபவங்களைச் சொல்லுவார். நாட்டை உயிருக்கு உயிரா நேசிச்சார். இப்ப உயிரையே நாட்டுக்குக் கொடுத்துட்டார்'' என்றார் கமறலாக. 

ராணுவ மரியாதையோடு முகுந்த்தை அனுப்பி வைக்க... இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானம் நோக்கி நகர்ந்தது.

பெங்களூரில் இருந்து 3 வயது மகள் அர்ஷியாவோடு வந்திருந்த முகுந்த்தின் மனைவி இந்து, கண்ணீரோடு தன் காதல் கணவனுக்கு கையசைத்து விடை கொடுத்தார்.  அவரைத் தேற்றிப் பேச வைத்தபோது... ""நானும் முகுந்த்தும் கிறிஸ்தவ கல்லூரியில் படிச்சோம். அப்ப ஏற்பட்ட நட்பு எங்களுக்குள் காதலா ஆச்சு. நான் கேரள கிறிஸ்டின். அவர் பிராமின். அதனால் அவங்க வீட்ல எதிர்த் தாங்க. பிறகு அவங்களை சமாதானப்படுத்தி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க இனிமையான லைஃப் இப்படியே தொடரும்னு நினைச்சோம். எல்லாம் கனவாப் போயிடிச்சி. பாப்பா அர்ஷியாவுக்கு அப்பா போனதே தெரியலை. முகுந்த்தை நான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். அவர் என்னோட கலந்துட்டார். அவரைப் பத்தி செய்தி வந்தப்ப, இதயம் சுக்குநூறா தெறிச்சிடிச்சி. அந்த நிலையிலும் முகுந்துக்காக ஃபேஸ்புக்கில் ஒரு பாடல் எழுதினேன். அது... "எப்போதும் வாழ்பவனே... என்னைக் காதலித்த நீ எங்கே?  நான் உன்னை மட்டுமே நேசிக்கிறேன். எங்கும்... எப்போதும் என்றும்...'’என்றார் தேம்பலுடன்.

அவரின் கண்ணீரில் காதலின் ஈரம். 

தேசத்துக்காக உயிர்கொடுத்த முகுந்த்து களுக்கு மரணம் ஏது?             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக