திங்கள், 28 ஏப்ரல், 2014


தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை
“யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டும்” என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று. அப்பழமொழிக்கு நிறைய அர்த்தங்கள் கூறினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது சாலப் பொருந்தக் கூடியதாக உள்ளது.
இலங்கைத் தமிழர்களை எந்த வழிகளிலெல்லாம் அடக்கியாள வேண்டுமோ, அதனை செயல்முறையில் காட்டத்தவறாத மகிந்த அரசாங்கம், புதிய முறையினைக் கையாண்டு விட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் தருணமிது.
தமிழினத்தின் கட்டமைப்பு, கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் என அனைத்தையும் சிதைத்து, சொந்த மண்ணில் அநாதைகளாக்கி விட்ட இலங்கை அரசு, புலம்பெயர் உறவுகளுக்கும் தாயக உறவுகளுக்குமிடையிலான உறவினை அறுக்க முடிவு செய்தது.
நீண்ட நாட்களாகப் போட்ட திட்டத்தினை தற்போது நிறைவேற்றியுள்ளது எனலாம்.
16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழும் 424 தனிநபர்களின் பெயர் விவரங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்த பெருமிதத்தில் உள்ளது இலங்கை.  இதனை மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் சகலருக்கும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஐநா பாதுகாப்பு சபை கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில், சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இந்த அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளதாக இலங்கை அரசு விளக்கம் கூறியுள்ளது.
என்னதான் விளக்கம் கூறினாலும், அரசின் உள்நோக்கம் தமிழர்களுக்கு மேற்குலகத்திலிருந்து வரும் உதவிகளைத் தடை செய்வதே என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த அமைப்புகளுடன் இலங்கைப் பிரஜைகள் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடக் காரணமும் இதுவே.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் தற்போது மெதுவாக தன்னுடைய வேலையினை காட்ட ஆரம்பித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையினைக் கொண்டுவந்து அதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினையும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் கொண்டுவர முயற்சித்த நாடுகளின் முகத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் கரியைப் பூசி வருகின்றது. ஒற்றைக் காலில் நிற்கும் இலங்கைக்கு முதுகில் மீண்டுமொரு அடி விழுந்துள்ளது.
வெளிநாட்டு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக இலங்கை தடை செய்ததையடுத்து, பல நாடுகளில் இதுவரை வீசா அனுமதியின்றி தங்கியிருந்த புகலிட கோரிக்கையாளர்களுக்கு அந்நாடுகள் வீசாக்களை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்நடவடிக்கை மும்முரமாக இடம்பெறுவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கை அரசு தனது வர்த்தமானியில் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டதனால் அந்நாட்டில் இன்னமும் இனவாதம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதனை சர்வதேச நாடுகள் தெளிவாக நம்பக்கூடியதாக இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு குடை நிழலின் கீழ் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்கள் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு தெரிவித்து, இலங்கையில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனக் காட்டிவருகின்ற போதிலும் கடந்த மாதம் வெளிவந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேசத்திற்கு இலங்கையில் நடக்கும் அநீதிகள் பற்றி வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளன.
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை மற்றும் புலிகளின் புதிய உருவாக்கம் என்பன இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் முன்வைத்துள்ள விண்ணப்ப ஆதாரங்கள் உண்மை என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
இதனையடுத்து புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களுக்கும், விண்ணப்பத்தை நிராகரித்தவர்களுக்கும் அகதி அந்தஸ்தை வாரி வழங்கி வருகின்றன மேற்கத்தைய நாடுகள்.
தூசி விழுந்தாலும் துடைத்துக் கொண்டு, பார்வையாளராக இருக்கும் சர்வதேசத்தின் கண்களில் தற்போதுதான் ஈரம் ததும்புகிறது போலும்.
இங்கு இவ்வாறு குறிப்பிடக்காரணம், அகதி அந்தஸ்து கோரி, மேற்குலக நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை ஆவணங்களை மட்டும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு, எதிர்பார்த்த ஆவணங்கள் மற்றும் உரிய காரணங்கள் சொல்லப்படாவிடின் நாடுகடத்தப்பட்ட சம்பவங்கள் அநேகம் உள்ளன.
நாடுகடத்தப்பட்ட பலரின் வாழ்வு சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்தது கொண்டிருப்பதை இன்றும் நாம் அறிவோம்.
பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு மேற்குலக நாடுகளிலிலுந்து ஆயிரக்கணக்கான ஈழத்தமிர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டனர்.
சுட்டிக்காட்டவேண்டிய முக்கிய விடயம், அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி படகில் சென்ற ஈழத்தமிழர்களை அலைக்கழித்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையுடன் கைகோர்த்து, கட்டம் கட்டமாக நாடுகடத்தியது.
அதுமட்டுமின்றி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, பலரை தடுப்பு முகாம்களில் காலவரையறையற்ற வகையில் தடுத்து வைத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எல்லாவற்றையும் இழந்து புகலிடம் கோரும் தமிழர்களின் நிலை இதுதான்.
திருப்பியனுப்பப்பட்ட அனைவரையும் இலங்கை அரசு சும்மா விட்டுவைக்கவில்லை, கோழிக்குஞ்சுகளுக்கு காத்திருக்கும் பருந்தைப் போல, நாடுகடத்தப்பட்டவர்களை அள்ளிக் கொண்டு விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்தது. இதனையும் சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் அப்போது இருந்தது.
இந்த நிலையில், புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களுக்கும், விண்ணப்பத்தை நிராகரித்தவர்களுக்கும் அகதி அந்தஸ்தை வாரி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசாங்கம் தன் கண்ணை தானே தனது விரலினால் குத்திய கதையாகி விட்டது. அதுமட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.
இலங்கை அரசு மேலும் இதுபோன்று பலரின் பெயர்களை தடை செய்ததாக அறிவிக்குமாயின், அது இலங்கை அரசுக்கு மேலும் தீரா தலைவலி ஆகும் என்பதை மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக