வியாழன், 16 ஜூன், 2011


மனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்பில் இலங்கைக்கே முதலிடம்
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 08:23.48 AM GMT ]
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கே முன்னுரிமை உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கின்றது.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அபிப்பிராயமாகும் என்று அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
செனல்-04 காணொளிக்காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவானது அதன் அறிக்கையில் சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனாலும் அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதாயின் குறைந்த பட்சம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்படவேண்டும்.அதற்கும் அங்கத்துவ நாடுகளின் அனுமதி தேவைப்படும்.
அவ்வாறின்றி சர்வதேச விசாரணைக்கமிஷன் ஒன்றை அமைப்பதற்கான விடயம் நடைமுறைச்சாத்தியமற்றதாகி விடும். ஆயினும் இலங்கை தானாக முன்வந்து இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்தது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் கருதுகின்றார் என்றும் மார்ட்டின் நெசர்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.  thx-tamilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக