வியாழன், 16 ஜூன், 2011


முதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் விசிறி
 தாலுகா அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடு


பேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கவர்னர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான பூர்வாங்க பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. பொது விநியோக திட்டத்தில் அரிசி பெற தகுதி உடைய சுமார் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை ரேஷன் கடை மூலம் வழங்க இட வசதி போதாது என்பதால் தாலுகா அலுவலகங்கள் மூலம் தாசில்தார் கண்காணிப்பில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணப் பணம் தாலுகா அலுவலகம் மூலம் தான் மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டது. அதே முறையை இப்போது பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்கு மட்டும் சுமார் 2 கோடி மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தேவைப்படும் என்பதால் அரசின் டெண்டரை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கு பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள் ரூ. 10 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும். மின் விசிறி சப்ளை செய்ய விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும்.

கிரைண்டர், மிக்சி, மின் விசிறி தரம் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முன்னணி நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு விருப்பப்பட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் 11-ந்தேதி வரை டெண்டர் போட கால அவகாசம் கொடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக