கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வு அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 04:31.44 AM GMT ]
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக்குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் வழமைக்கு மாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே பிரஸ்தாப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான மூலமான சட்டவிரோத நடவடிக்கைகளைகத் தடுப்பதற்காக இலங்கை குடிவரவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுகின்றனர். அதற்காக அண்மைக்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான அவுஸ்திரேலிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தல்காரர்களிடம் மக்கள் சிக்கிக் கொள்வது ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோத கடத்தல்காரர்களிடம் ஏமாறும் பொதுமக்கள் பணத்தையும், உயிரையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் முகம் கொடுக்கின்றனர்.
அத்துடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான சட்டவிரோத கடல் பயணத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக