வியாழன், 1 மே, 2014


வெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கறுப்பு பண வழக்கு
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி தொடர்ந்த பொது நல
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை மனுதாரர் ராம் ஜெத்மலானிக்கு அளிக்குமாறு’ மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், மத்திய அரசு வருவாய்த்துறை செயலரின் தலைமையில் அமைத்த கறுப்பு பணம் மீதான உயர்நிலைக் குழுவை சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை திரும்ப பெறுமாறு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
18 பேர் பெயர்கள்
கடந்த 22–ந்தேதி நடந்த விசாரணையின் போது ‘கறுப்பு பணம் விசாரணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த சில உத்தரவுகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இதுவரை மேற்கொண்ட விசாரணை முடிவுகள் குறித்த விவரங்களை மனுதாரரான வக்கீல் ராம் ஜெத்மலானியிடம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு ‘சீல்’ வைக்கப்பட்ட கவரை கடந்த 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் ‘ஜெர்மன் நாட்டில் உள்ள லீஸ்டென்ஸ்டெயின் வங்கியில் கணக்கு வைத்துள்ள 18 நபர்களின் பெயர்களையும் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும்’ தாக்கல் செய்தது.
இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எச்.எல்.தத்து, ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் மற்றும் மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘சி.பி.ஐ., நீதிமன்றம் வசம் ஒப்படைத்த ‘சீல்’ வைத்த கவர்களில் தரப்பட்டுள்ள ஜெர்மன் வங்கியில் கறுப்புப் பணத்தைபோட்டு வைத்திருப்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை மனுதாரர் ராம்ஜெத்மலானிக்கு 3 நாட்களுக்குள் மத்திய அரசு அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
மேலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த விசாரணையை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா மற்றும் துணைத்தலைவராக முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோரை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக