வியாழன், 1 மே, 2014



சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத உளவாளி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் அழித்து, சீர்குலைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நாசகார திட்டங்களை தீட்டி அரங்கேற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியாக இந்தியாவை அழிக்கும் நோக்கில், இந்திய ரூபாய் நாணயத்தாள்களை போன்ற பல ஆயிரம் கோடி கள்ள ரூபாய் நாணயங்கள் அச்சடித்து பாகிஸ்தான் இந்தியாவிற்குள் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வழங்கி, இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர்.
அவ்வாறு ஊடுருவும் தீவிரவாதிகள், குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களை அழித்து, நாசகார வேலைகளில் ஈடுபடுகிறார்கள். நாடு முழுக்க அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் தரை மார்க்கமாகவும், ஆகாயமார்க்கமாக விமானத்திலும், கடல் வழியாக எந்திர படகுகளிலும் ஊடுருவி வந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை, இலங்கையில் இருந்து கடல் வழியாக ஊடுருவச் செய்து, தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் மிகப்பெரிய நாசவேலைகளில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளது என்று, மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸார் எச்சரித்து வந்தனர்.
இதனால் மேற்கண்ட 3 மாநிலங்களின் கடலோர பகுதி பலத்த பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளன.
உளவுப்பிரிவு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை உண்மை என்பதை நிரூபிக்கும் சம்பவம் நேற்று முன்தினம், சென்னையில் அரங்கேறியது.
பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்ப்பதற்காக, நவீன பயிற்சி பெற்ற பயங்கரவாத உளவாளி ஒருவர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர் சென்னையில் மண்ணடி மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் மாறி, மாறி விடுதிகளில் தங்கி இருந்து உளவு பார்த்து வருவதாகவும், மத்திய உளவுப்பிரிவு பொலிஸார், மாநில உளவுப்பிரிவு பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் அனுப்பியிருந்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து, தமிழக பொலிஸ் பணிப்பாளர் ராமானுஜம், தமிழகத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடி பிடிக்கும் கியூ பிரிவு பொலிஸாரை பாகிஸ்தான் உளவாளியை பிடிக்க களத்தில் இறக்கினார்.
பொலிஸ் ஆணையாளர் கண்ணப்பன், பொலிஸ் அத்தியட்சகர்கள் அருள்அரசு, பவானீஸ்வரி ஆகியோரின் தலைமையில் கியூ பிரிவு பொலிஸார் சென்னையில் மண்ணடி, திருவல்லிக்கேணி பகுதியை ரகசியமாக சுற்றி வளைத்து, கண்காணித்தனர்.
மண்ணடியில் உள்ள விடுதி ஒன்றில் இலங்கை பிரஜை ஒருவர் தங்கி இருந்தார். அவரை நேற்று முன்தினம் காலையில் பொலிஸார் பிடிக்க முயற்சித்த போதும் அவர் பொலிஸாரிடம் சிக்காமல் ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்.
அவரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்றனர். அந்த இலங்கை நபர் திருவல்லிக்கேணி சென்று, அங்கிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் உள்ள, சுவாமி சிவானந்தா சாலையில் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அவரை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.
அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தான் பாகிஸ்தான் நாட்டின் உளவாளி என்று தெரிய வந்தது.
அவரது பெயர் முகமது ஜாகீர் உசேன் (வயது 37). அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அவர் பொலிஸாரிடம் கூறிய தகவல்கள் வருமாறு,
இலங்கையில் கண்டி, எனது சொந்த ஊர். நான் பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முகவராக பணியாற்றி வருகிறேன். அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பேன்.
அவர்கள் சொன்ன வேலைகளை செய்து கொடுத்தால், எனக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுப்பார்கள்.
இலங்கையில் கொழும்பு நகரத்தில் செயல்படும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் இருவர் என்னோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.
அவர்கள் என்னை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதற்கு அந்த தூதரங்களின் புகைப்படங்களை படம் பிடித்து அனுப்ப வேண்டும் என்றும் எனக்கு கட்டளை பிறப்பித்தனர். நான் விமானத்தில் சென்னை வந்தேன்.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை படம் பிடித்து இ-மெயில் வாயிலாக, நான் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.
அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று, அங்குள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரக அலுவகத்தை படம் பிடித்து அனுப்ப திட்டமிட்டு இருந்தேன்.
நான் சென்னையில் தங்கி இருக்க தேவையான செலவுக்கு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பணம் கொடுத்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் எடுத்து அனுப்பவும், எனக்கு ஆணை பிறப்பித்து உள்ளனர்.
எனக்கு 2 செயற்கை கோள் செல்போன்களும் கொடுத்து அனுப்பினார்கள். அதன்மூலம் நான், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு பேசி இருக்கிறேன் என ஜாகீர் உசேன், பொலிஸாரிடம் கூறியுள்ளார். 
அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த தமிழக பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக