ஞாயிறு, 4 மே, 2014

மீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுகளும் பேச்சு 
இலங்கை இந்திய மீனவர் பேச்சைத் தொடர்ந்து இரு தரப்பு அமைச்சரவை மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாகக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 
இலங்கை இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சு எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சு நடத்த தமது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை இந்திய மீனவர்களிடையே, எல்லை தாண்டுதல் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டிருந்து. இதனையடுத்து இருதரப்பு அமைச்சரவை மட்டத்திலான பேச்சு டில்லியில் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சு சென்னையில் ஜனவரி 27 ஆம் திகதி இடம் பெற்றிருந்தது.
 
அதன் பின்னர் இரண்டாம் கட்டப் பேச்சு மார்ச் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தினால் அந்தப் பேச்சு ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதுவும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
தொடர்ச்சியாகத் தடைப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பேச்சு எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.இந்தப் பேச்சு தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்;
இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சு நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுக்கு பின்னர் இரு நாட்டு அமைச் சுக்களிடையே 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
எனினும் இந்த விசேட குழு எப்போது சந்தித்துப் பேசும் என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டத்துக்குச் சென்னையில் இருந்து 28 பேர் கொண்ட குழுவினர் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். அத்துடன் இலங்கை சார்பாகவும் 28 பேர் கலந்துகொள்ள வுள்ளனர். 
 
இந்திய மத்திய அரசு முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த கூட்டத்தை நடத்த நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக