சனி, 3 மே, 2014



சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. "பயணிகளின் கனிவான கவனத்திற்கு... பெங்களூரிலிருந்து வரும் ஹவ்காத்தி எக்ஸ்பிரஸ் ரயில்... ஒன்பதாவது நடைமேடையிலிருந்து  சற்றுநேரத்தில் புறப் படத்தயாராக இருக்கிறது'’’என்ற அறிவிப்புக் குரலையே மிஞ்சியது அந்த குண்டுவெடிப்புச் சத்தமும் அதனை
த் தொடர்ந்து பயணிகளின் அலறல் சப்தமும்.  

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை நோக்கிப்பறக்க...எஸ்-4 மற்றும் எஸ்-5 ரயில் பெட்டி உள்ளே வெடித் துச் சிதறியதில்...  ரத்தவெள்ளத்தில் மிதந்தார் எஸ்-4ல் பயணித்த 24 வயதே ஆன பிரச்சூரி ஸ்வாதி என்ற இளம்பெண். பத்துக்கு மேற்பட் டோர் படுகாயங்கள் அடைய... காவல்துறை யினரும் மருத்துவத்துறையினரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு எதிரிலுள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத் துவமனைக்கு கொண்டுசென்றனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பாம் வெடித்துவிட்டது என்ற செய்தி ஊடகங்களின் வாயிலாக லைவ் டெலி காஸ்ட் ஆக "திக் திக்' தமிழகமானது. 

எஸ்-7 கோச்சில் பயணித்தபோது நடந்த ரயில் விபத்தை நடுக்கத்துடன் விவரிக்கிறார் பயணி நளினி ""இப்போ நினைச்சாலும் மனசு பக்குனு இருக்குங்க. 3 மணிக்கு ட்ரெயின் ஏறினோம். கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண், ஹார்ட்பேஷண்டுன்னு மொத்தம் 13 பேர் நாங்க. ஜோலார் பேட்டையிலிருந்து கொல்கத்தாவிலுள்ள  அண்ணன் வீட்டுக்கு சுற்றிப்பார்க்க கிளம்பினோம். நல்ல தூக்கம்.  சென்னை சென்ட்ரல் வந்தபோது அரைத் தூக் த்துல இருந்தோம்.  ப்ளாட்ஃபார்முக்கு வந்த ட்ரெயின் பதினஞ்சு இருபது நிமிஷம்கூட ஆகலைங்க. திடீர்னு ஒரு காதைபிளக்குற சத்தம். எங்க ஈரக்கொலை எல்லாம் நடுங்கிடுச்சு. 

ஒரே புகையா வர ஆரம்பிச்சிடுச்சி. நாங்க எல்லோருமே லேடிஸா இருந்ததால என்ன ஏதுன்னு தெரியாம அலற ஆரம்பிச்சுட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது பக்கத்து கோச்ல பாம் வெடிச்ச விஷயம். பதறியடிச்சுக்கிட்டு வெளியில ஓடிவந்துட்டோம்'' என்று உயிர் அச்சம் விலகாமல் பேசிய நளினி, ""நாங்களாவது உயிர் தப்பிச்சோம். ஆனா, பாவம்ங்க அந்த ஸ்வாதிங்குற பொண்ணு... இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்க. இவங்கள்லாம் என்ன தப்புங்க பண்ணினாங்க? படுபாவிங்க. அநியாயமா பாம் வெச்சு அந்த பிள்ளையோட உசுரை பறிச்சுட் டானுங்களே. என்னென்ன கனவுகளோடு அந்த பிள்ளை பயணம் செஞ்சிருக்கும்?'' என்று உச் கொட்டுகிறார்கள் நளினியும் அவர்களுடன் வந்த பயணி களும்.

குண்டு வெடிப்புக்குள்ளான எஸ்-4 பெட்டியில் பயணித்து உயிர்தப்பிய சுதன் தேவ்நாத்திடம் சிகிச்சையில் இருக்கும்போது பேசினோம், ஹிந்தியில் பேசினார், ""பெங்களூரிலிருந்து ஹவுகாத்திப் போய்க்கிட்டிருந்தேன். திடீர்னு சீட்டுக்கு அடியிலிருந்து சத்தம். காலில் அடிபட்டு பயங்கர வலி...ரத்தம் பீறிட்டு வர ஆரம்பிச்சுடுச்சி. ஒரே புகை. கொஞ்சநேரத்துலேயே நான் மயக்கமாகிட்டேன். கண்ணைத்திறந்து பார்த்தா ஹாஸ்பிட்டலில் இருக்கேன்.  உயிர்பிழைப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வலியால் அங்குமிங்கும் துடித்தார்.

இதேபோல் எஸ்-4 கோச்சில் உயிர்தப்பிய இன்னொரு பயணி கிருஷ்ணாபர்மா... ""பேரதிர்ச்சியா இருக்குங்க. திடீர்னு என்னோட காலில் தீப்பற்றி எரிஞ்சதோடு என்னோட கழுத்துலயும் ஆணி குத்திடுச்சி.  இப்போ, ஆபரேஷன் பண்ணியிருக்காங்க.  கழுத்துல இருக்குற ஆணியை இப்பவே எடுத்தா உசுருக்கு ஆபத்து. அடுத்ததா பண்ற ஆபரேஷன்ல தான் எடுக்கமுடியும்னு சொல்லிட்டாங்க. நாங்கள் லாம் கூலிவேலை செய்யுறவங்க. சாலைவேலைக்குப் போக பயணிச்சுக்கிட்டிருந்தேன். என்னோட சம்பாத்தியத்துலதான் என்னோட குடும்பம். என்கூட வந்த என் தம்பி எங்க இருக்கான்னே தெரியல. என்னோட செல்ஃபோன் பேக்லாம் எங்கப் போச்சின்னே தெரியல. அது போகட்டும், "நான் உயிர் பிழைப்பேனா?’’ என் தம்பி கிடைப்பானா?'' என்று ஏக்கத்தோடு கேட்கும்  அவருக்கு,  "உங்களுக்கு ஒண்ணும் ஆகாது கவலைப்படாதீங்க'’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு... இன்னொரு பெட்டில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் பிஜேன்குமார் அருகில் சென்றோம். அவரது தோழி மற்றும் நண்பர்கள் அவருக்கு இட்லியை ஊட்டிக்கொண்டிருந்தனர். அவனது நண்பர் டி.ஹெச்.மீனாகுமார் நம்மிடம், ""நாங்க 20 பேர் கராத்தே ஈவண்ட்டுக்காக போயிட்டு... மணிப்பூர் போறதுக்காக இந்த ட்ரெயின்ல  எஸ்-5 கோச்சில் ஏறினோம். பிஜேன் குமாருக்கும் கராத்தேன்னா வெறி. இப்போ, இந்தக் கோர விபத்தால இவன் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சி. கராத்தேவுக்கு முக்கியமா காலில் பவர் இருக்கணும். அந்தப் பவரை இழந்து இப்போ ரொம்பவே மன உளைச்சலில் இருக்கான்'' என்கிறார் அவரது நண்பர்.   



பரிதாபமாக உயிரிழந்த பிரச்சூரி ஸ்வாதி.  ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள ஜெக்லாந் தர் கிராமத்தை சேர்ந்தவர்.  விவசாயக்குடும்பம். ஆனாலும், கஷ்டப்பட்டு ஹைதராபாத்தில் எம்டெக் படிக்கவைத்தனர் ஸ்வாதியின் குடும்பத் தினர். தம்பி மும்பை ஐ.ஐ.டியில் படிக்கிறார். ஜனவரி மாசம்தான் பெங்களூரிலுள்ள டாடா கன்சல் டன்சியில் வேலைக்கு சேர்ந்தார் ஸ்வாதி. மே-1 ங் குறதால பெங்களூரில் இரண்டு நாட்கள் விடு முறை. அதோடு சனி ஞாயிறும் வருவதால் 4 நாட் கள் லீவு கிடைக்குதுன்னு அம்மா-அப்பாவைப் பார்க்க ஆசையோடு கிளம்பியிருக்கிறார் ஸ்வாதி. 

""ரிசர்வேஷன்ல டிக்கெட் கிடைக்காததால தக்கலில்தான் டிக்கெட் எடுத்துக்கிட்டு பெங்களூரு கன்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன்ல ஏறி யிருக்காங்க. எஸ்-4 கோச்சில் பய ணிக்கும்போதுதான் இப்படியொரு கோரவிபத்து ஏற் பட்டிருக்கு. விஜய வாடாவுல அப்பா பிரச்சூரி ராம கிருஷ்ணா தன்னோட மகளின் வருகைக்காக காத்துக்கிட்டிருந்திருக் காரு. ட்ரெயின் ஒரு மணிநேரத்துக்குமேல தாமதமா வரும் தகவல் அவருக்கு கிடைச்சதால கேஷுவலா இருந்திருக் காரு. ஆனா, அதற்குள்  திடீர்னு மீடியாக்கள்  வீட்டை நோக்கிவந்து "உங்க பொண்ணு பாம் ப்ளாஸ்டுல இறந்துட்டாங்க'ன்னு சொன்னப்பதான் அம்மா காமாட்சி கதறி துடிச்சிருக்காங்க''’’- சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட உடலைவாங்க வந்த ஸ்வாதியின் உறவினர் கண்ணீரோடு விவரித்தார்.   

""பாம் ப்ளாஸ்ட் இன்ஃபர்மேஷன் கிடைச்ச துமே டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்டவர்களுக்கு அலர்ட் கொடுத்துவிட்டோம். பிரச்சூரி ஸ்வாதி  என்ற இளம்பெண் ஸ்பாட்டிலேயே உயிரிழந்துவிட 14 ஆண்கள், 1 பெண் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில், ஐந்துபேருக்கு தீவிர அறுவை செய்யப்பட்டுள் ளது'' என்கிறார்கள் மருத்துவமனையின் டீன் விமலா, ஆர்.எம்.ஓ.க்கள் ஆனந்த் பிரதாப் மற்றும் சுப்புலட்சுமி உள்ளிட்ட மருத்துவ டீம்.  

சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணிகள் பாதுகாப்புச்சங்கத் தலைவர் தனுஷ் கோடி, ""ஏற்கனவே ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவன் சிக்கி யிருக்கும்போது... சென்னை சென்ட்ரலில் இப்படி யொரு சம்பவம் நடந்திருப்பது மத்திய-மாநில உளவுத் துறையின் பலகீனத்தையே காட்டுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையும் மத்திய அரசின் பாதுகாப்புப் படை யார் எதை கவனித்துக்கொள்வது என்ற போட்டா போட்டியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன.  தமிழக அரசின் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையிலேயே 250 வேக்கண்ட் இருக்கிறது. இருப்பவர்களும் வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்குப் போய்விடுகிறார்கள்.   

உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால் சென்னையிலிருந்து சூலூர்ப்பேட்டை வரை 62 கிலோ மீட்டர் தூரம். ஆனால், இதற்கு கொருக்குப்பேட்டை யில் ஒரேயொரு ரயில்வே காவல்நிலையம்தான் உள்ளது. அப்போ இந்த ஜுரிஸ்டிக்ஷனில் ஒரு கோர சம்பவம் ஏற்பட்டால் போலீஸ் போய்ச்சேரவே இரண்டு மணிநேரமாகிவிடும். ஏதாவது, முக்கியமான நாட்களில்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் பயணிகளை பரிசோதனை செய்கிறார்கள். தென்னக ரயில்வேயின் தலைமையகத்திலேயே இப்படியிருந்தால் மற்ற இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்'' என்கிறார் அவர்.

திக் திக்கிலிருந்து விலகாமல் இருக்கிறது சென்னை!

-மனோ



 மோடியை மிரட்ட பாட்னா ஸ்டைல்!

பிரதம வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். கடந்த 2013 அக்டோபர் 27-ந்தேதி பீகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 10 இடங்களில்  தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது நாடுமுழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வெடித்தது டைம் பாம் என்றும் அது அம்மோனியம் நைட்ரேட் கலக்கப்பட்ட குறைந்த சக்திகொண்ட பாம் என்றும் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.  சென்னையில் வெடித்த குண்டும் பாட்னா மாடலை சேர்ந்தது என்று தமிழக புலனாய்வுத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி  (மே-1) இன்று கூடூர், நெல்லூர், விசாகப்பட்டினம், மகனபள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய வந்தார்.    

""குண்டுவெடித்த பெங்களூர்- ஹவுகாத்தி எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் பயணித் திருந்தால் குண்டுவெடித்த நேரத்தில் கூடூர் -நெல்லூர் இடையே  சென்றுகொண்டிருந் திருக்கும். அப்போது இந்த குண்டுவெடிப்புச்சம்பவம் நடந்திருந்தால் மிகப்பெரிய விபத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், சம்பவம் நடந்த எக்ஸ்பிரஸ் பெங்களூரில் 45 நிமிடமும் ஜோலார்பேட்டையில்  45 நிமிடமும் என 1 1/2 மணிநேரம் காலதாமதமாக சென்னை வந்தடைந்தது. ரயிலில் இருந்தது ‘டைம் பாம் ‘ வகை என்பதால் தீவிரவாதிகளால் நேரத்தை மாற்ற முடியாததால் சென்னையில் நிற்கும்போதே வெடித்துவிட்டது'' என்று சொல்கிற தமிழக புலனாய்வுத்துறையினர், ""மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்கிறார்கள்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக