வியாழன், 1 மே, 2014


நீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ரணில்
அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை செயற்படுத்த முனைவது குறித்து கவலையடைவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது கொண்டு வந்த இலங்கை மீண்டும் கட்டியெழுப்புவோம் திட்டத்தில் 208 வது பக்கத்தில் கொழும்பில் இரண்டு 5 நட்சத்திர ஹொட்டல்களை நிர்மாணித்து சூதாட்டங்களை நடத்தி செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரியளவிலான குறுகிய கால வரிச்சலுகை வழங்கப்படும் எனவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் கொழும்பு நகரில் உள்ள கட்டிடங்களை வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் முதலீடுகளுக்காக வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கொழும்பு நகரை கசினோ புரியாக மாற்ற முன்வைத்த யோசனையை நான் அங்கம் வகிக்கும் இன்றைய அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ செயற்படுத்த முனைவது குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த இரண்டு வர்த்தக திட்டங்களை அமுல்படுத்த போவதில்லை என அரசாங்கம் தற்போதாவது அறிவிக்க வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - ரணில்
உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையம் ராஜபக்ஷ துஸ்ட ஆட்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கு முற்போக்கு சக்திகளின் உதவியை நாட வேண்டியது அவசியமானது.
ஆயிரம் துன்பங்களை எதிர்நோக்கி வரும் மக்கள் இன்று மே தினத்தை கொண்டாடுகின்றனர்.
அரசாங்க ஊழியர்களின் நலன்கள் உரிமைகள் வரப்பிரசாதங்கள் மெது மெதுவாக பறிக்கப்படுகின்றது.
நாட்டுக்கு அதிகளவில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் வெளிநாட்டு பணியாளர்கள் கவனிக்கப்படுவதில்லை.
இந்த துஸ்ட ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி மக்கள் நலனை கருத்திற் கொள்ளும் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக