வியாழன், 1 மே, 2014


மட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வினை குழப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி¨-படங்கள் 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் மேதின நிகழ்வுகளை குழப்பும் வகையிலும் நிகழ்வுக்கு வருகை தருவோரை திசை திருப்பும் வகையிலும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
த.தே.கூட்டமைப்பின் துண்டுப் பிரசுரங்களையொத்த துண்டுப் பிரசுரங்கள் மட்டு. நகரில் ஒட்டப்பட்டிருந்ததுடன் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீசப்பட்டிருந்தன.
இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை இரவு நிகழ்வு நடைபெறும் மற்றும் நகர்ப்பகுதிகளில் இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மே தினத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அதேபோன்றதான துண்டுப் பிரசுரமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டிருந்தது.
அதில் மே தின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடப்பட்டிருந்தது.
எனினும் திட்டமிடப்பட்டவாறு சார்ள்ஸ் மண்டபத்தில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
இன்று காலை மட்டக்களப்பு மண்கூண்டு கோபுரத்தில் இருந்து நிகழ்வு நடைபெற்ற சார்ள்ஸ் மண்டபம் வரையில் தொழிலாளர்கள் உரிமையை பாதுகாப்போம் என்னும் கோசத்துடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் மேதினக் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா, கோ.கருணாகரம், நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), துரைராஜசிங்கம், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், ஆகியோரும் மாவட்டத்தின் இளைஞர் அணித்தலைவர்கள், செயலாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
தமிழர்கள் அபிவிருத்தியல்ல அபிலாசைக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர்- பொன்.செல்வராசா
இந்த நாட்டிலே காவியுடை தரித்தவர்கள் எதைச் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை இல்லை என்ற நிலையே காணப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.
இன்றைய நாள் தொழிலாளர்கள் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட நாள். தடைகளை தகர்த்தெறிந்த நாள். இந்த நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த போர்க்காலத்திலும் போர் முடிந்த பின்னரும் அதனை நடத்தாமல் இருந்தது.
நீங்கள் அறிந்த விடயம் இருந்தும் இம்முறை இந்நிகழ்வினை நடத்துவது திருப்திகரமாக இருக்கின்றது.
மட்டக்களப்பை பொறுத்த வரையில் மேதினம் என்றால் தொழில் சங்கவாதிகள், தொழில் சங்கங்கள் இந்த மாவட்டத்திலே அதிகமாக இருந்தார்கள். தொழில் சங்கவாதியின் தந்தை என்று சொன்னால் காலஞ்சென்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த வணசிங்க. தேசிய ரீதியாக மேதினத்தினை கொண்டாடிய பெருமை இவருக்குண்டு இவரப்போன்று பலரை இவ்விடத்தில் நினைவுகூற முடியும்.
த.தே.கூட்டமைப்பினை பொறுத்தவரையில் இந்த நாட்டில் ஜனநாயக வாதிகள் எவரையும் சுரண்டப் போவதுமில்லை கோசம் எழுப்பப் போவதுமில்லை. மாறாக எங்களது உரிமை பறிக்கப்படுகின்றபோது நசிக்கப்பட்டு, ஒடுக்கப்படுகின்றபோதும் குரல் கொடுக்கின்ற அரசியல் தாபனமாக நாங்கள் இருக்கின்றோமே தவிர யாருக்கும் விரோதிகள் அல்ல. நாங்கள் யாரையும் விரோதிகளாகப்பார்ப்பவர்களும் அல்ல இதனால் தான் வட கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் 99வீதமாக எங்களை ஆதரிக்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த முறை மாகாணசபை தேர்தலில் 7 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டதில் 6 பேர் த.தே.கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் என்றால், ஜனநாயகம் யாரின் பக்கம் இருக்கின்றது. அந்த அளவிற்கு தமிழ் மக்கள் எமது கட்சியினை ஆதரித்து இருக்கின்றார்கள்.
அதே போன்றுதான் நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் 30 அங்கத்தவர்களைப் பெற்று வட மாகாணசபையை கைப்பற்றி வெற்றிபெற்று இருக்கின்றது.
இந்த ஆதரவினை முறியடிப்பதற்காக அரசாங்கம் பல சதித்திட்டத்தினை கட்டவிழ்த்து இருக்கிறது. அபிவிருத்தி என்ற அயுதத்தைப் பாவித்து மக்களை ஏமாற்றகின்றனர். எம்மைப்பொத்த மட்டில் நாம் அபிவிரித்திக்கு எதிரானவர்கள் அல்ல.
எம்மைப் பொறுத்தமட்டில் அபிலாசைக்குப் பின்னர்தான் அபிவிருத்தி. அம்பாந்தோட்டையில் இடம்பெறாத அபிவிருத்தியா, அங்கேதான் சர்வதேச விமானநிலையம், விளையாட்டு மைதானம் உட்பட பல அபிவிருத்திகள் இடமபெற்று இருந்தாலும் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
இது போன்றுதான் ஜனாதிபதியின் பணிப்பில் பல அபிவிருத்தி வேலைகள் கிளிநொச்சியில் நடந்தும் மாகாணசபைத் தேர்தலில் அரசால் எந்த ஆசனத்தினையும் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
இதைனை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் அபிவிருத்தியை விட அபிலாசைக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தள்ளனர்.
இன்று நேற்றல்ல 1949 இல் இருந்து இந்த அபிலாசைகள் தோற்றம் பெற்று இருக்கின்றன. அது இன்றும் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியான போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கின்றது.
2012 ஆண்டு 2013 ஆண்டு ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைபோன்று 2014 ஆண்டு ஜெனிவாத் தீர்மானம் சர்வதேச விசாரணை அமுலாக்கம் செய்ய எடுக்கப்பட்ட இருக்கின்றது.
இதனால் அரசாங்கம் விழித்து இருக்கின்றது அதே வேளை எப்படி தங்கள் வாக்கு வங்கியை எப்படி காப்பாற்றுவது என்ற நிலையில் அரசு உள்ளது என்றார்.
தமிழர்களை எல்லாத் துறைகளிலும் அரசாங்கம் ஏமாற்ற நினைக்கிறது:  த.கலையரசன்
இந்த உலகத்தை பொறுத்தவரையில் சகல போராட்ட துறைகளிலும் சாதனை படைத்தவர்கள்தான் தமிழர்கள் இந்தத்தமிழனை அன்றிருந்து இன்றுவரைக்கும்  ஏமாற்ற நினைக்கும் அரசாங்கம் தொழிலாளர்களை மாத்திரல்ல, ஏனைய அரச துறைகளில் உள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் மேதினக் நிகழ்வுகள் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றன.
இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
உலகிலேயே பலவகைப்பட்ட தினங்கள் கொண்டாடப்படுகின்றது அந்தத்தினங்களில் தொழிலாளர் தினமும் ஒன்றாகும். இத்தினமானது தொழிலாளர் வர்க்கத்தை பொறுத்தவரையில் சர்வதேச மட்டத்திலே மிகவும் முக்கியமானதொன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தினம் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தபோதும் இலங்கை நாட்டைப்பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்கான முக்கியத்துவம் இல்லையென்றே கூறலாம். இன்று இந்த நாட்டிலே மிகவும் துன்பப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் யாரென்றால் அது தொழிலாளர்களேதான் என்றுதான் கூறமுடியும்.
குறிப்பாக வடகிழக்கு மாகாணம், மலையகப் பகுதிகளிலும்கூட திட்டமிட்ட அடக்கு முறைக்குள்தான் இவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வாழ்கின்றார்கள் இவ்வாரான நிலமை இந்த நாட்டிலே நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
தொழிலாளர்களை நினைவுகூர்ந்து இத்தினத்தினை கொண்டாட இருந்த வேளையில் கூட பல சதிவேலைகள் இடம்பெற்றிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறான சதிவேலைகளை செய்பவர்கள் யார் இவர்கள் இதனை எதற்காகச் செய்கின்றார்கள் என்பதனை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த நாட்டிலே எந்த உரிமையும் அற்ற சுதந்திரமற்ற இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இந்த அரசாங்கம் எமக்கு எந்த சுதந்திரமான தீர்வையும் தருவதாக இல்லை இதற்காகவேண்டி எமக்கு நிலையான சமாதானமட வரும் வரைக்கும் எமது போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் செல்லவேண்டும்.
இந்த நாட்டிலே ஜனநாயகம் என்று கூறி அராஜகத்தினை செய்து கொண்டிருக்கின்றார்கள் மதபோதகர்கள் மக்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அவர்கள் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? ஒரு இனத்தின் நிலங்களை அபகரிப்பதும் அவர்களினது ஆலயங்களை அழிப்பதுமாகத்தான் இருந்து வருகின்றது.
இந்த உலகத்தை பொறுத்தவரையில் சகல போராட்ட துறைகளிலும் சாதனை படைத்தவர்கள்தான் தமிழர்கள் இந்தத்தமிழனை அன்றிருந்து இன்றுவரைக்கும்  ஏமாற்ற நினைக்கும் அரசாங்கம் தொழிலாளர்களை மாத்திரல்ல ஏனைய அரச துறைகளில் உள்ளவர்களையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.
அவர்கள் செய்த கொடுமைகளுக்கும் ஆக்கினைகளுக்கும் இன்று சர்வதேசம் இந்த அரசாங்கத்தினை பார்த்து பலகேள்விக்கனைகளை தொடுத்து நிற்கின்றது இதற்கான முன்னெடுப்புக்களுக்கு காரணகர்த்தாவாக இருக்க வேண்டியவர்கள் உங்களைப்போன்ற தமிழ்உணர்வுள்ள பற்றாளர்களும் எமது தமிழத்தலைமைகளும் என்பதனை நாம் என்றும் மறந்து விட முடியாது. இவ்வாறு செயற்பட்டால் மாத்திரம்தான் எமது விடுதலையை வென்றெடுக்கமுடியும்.
இந்த நாட்டிலே என்றோ ஜநனாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது சிறைக்கூடங்கள் கட்டப்படுவது சட்டத்தினை மதிக்காதவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவும் அவர்களை சமுதாயத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்கும் சிறைக்கூடங்கள் அமைக்கப்படுகின்றது. ஆனால் இந்த நாட்டிலே சிறையிலே அடைக்கப்பட்டவர்களுக்குக்கூட தங்களது உயிர்களை பாதுகாக்கமுடியாத அளவிற்கு கடந்தகால செயற்பாடுகள் அமைந்திருந்தது.
இந்த நாட்டிலே திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது எங்களுடைய தமிழ்த்தலைமைகள் நீதிமன்றம் சென்று தீர்வு கேட்டு போராடினார்கள் அன்று நியாயங்கள் சரியாக வழங்கப்படவேண்டிய சூழலில் அந்தநேரத்தில் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த சியானி பண்டாரநாயக்கா கூட அந்த உயர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார் இவ்வாறு நியாயங்கள் மறுதலிக்கப்பட்ட ஒரு நாடாக இந்த நாடு இருக்கின்றது.
இவர்களது நடவடிக்கைகள் யாவும் இனரீதியாகவும் மதரீதியாகவும்தான் சென்று கொண்டிருக்கின்றது இந்த நாட்டிலே உரிமைக்காக போராடியவர்கள் நாங்கள் உயிர் நீத்தவர்கள் நாங்கள் அத்தோடு வடகிழக்கு இணைப்பென்று கேட்டவர்களும் நாங்கள்தான் ஆனால் எங்கள் கருத்துக்களை மறுதழித்து வடக்கையும் கிழக்கையும் இரண்டாகப்பிரித்து தன்னிறைவு கானுகின்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கத்தினை பார்க்கவேண்டியிருக்கின்றது.
கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரையில் எங்கள் கட்சிசார்பாக பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம் இங்கு பல கொடுமைகள் எங்கள் இனத்திற்கு எதிராக தொடர்ந்து நடந்துகொண்டுதான் வருகின்றது அங்குள்ள அமைச்சர்களது தீர்மானங்களும். ஆளுனரின் தீர்மானங்களும்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றதே தவிர பாதிக்கப்பட்ட ஓரு இனத்தின் உரத்தகுரல் அவர்களுடைய செவிகளுக்கு கேட்பதில்லை.
எனவே இனிவரும் காலங்களிலாவது எமது இனத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு எமது இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து போராட முன்வருவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக