சனி, 3 மே, 2014

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆயுதங்களை அனுப்ப வேண்டும். வெடிகுண்டுகளை வெடிக்க வேண்டும் - இந்த மூன்றும்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்களின் டியூட்டி என்பார்கள்.  

 அந்த டியூட்டி மே 1-ம் தேதியன்று காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அரங்கேறியது. இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் ஓர் இளம்பெண் பரிதாபமாக இறந்துபோக, 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதன் பின்னணியில் சொல்லப்படும் பெயர் ஜாகீர் உசேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்கிற உளவாளியை சென்னை திருவல்லிக்கேணியில் வைத்து க்யூ பிரிவு போலீஸார் பிடித்தனர். ஆரம்பத்தில் எதுவுமே பேசாமல் மௌனம் சாதித்த ஜாகீர் உசேனிடம், சில ஆதாரங்களை போலீஸார் காட்டியவுடன் மிரண்டு போனார். ஒரு கட்டத்தில், 'என் மீது கை வைத்தால் தமிழகத்தின் அமைதி கெடும். பார்க்கிறீர்களா?' என்று சவால் விட்டிருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அன்பாக விசாரிக்க ஆரம்பித்ததும், கடகடவென விஷயத்தைக் கொட்டினாராம்.
வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களை ஒட்டியுள்ள இந்தியாவின் மேற்கு வங்க மாநில மால்டா என்கிற பகுதி வழியாக கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் அனுப்பி புழக்கத்தில் விடுவார்கள். இப்போது தங்கள் ஜாகையை இலங்கைக்கு மாற்றிக்கொண்டுவிட்டனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கள்ள நோட்டுகள் வரும். அங்கிருந்து கடல்மார்க்கமாக தமிழகத்துக்குள் கள்ள நோட்டுகள் பரவுகின்றன. கடந்த சில மாதங்களில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் ஆரம்பித்து பல்வேறு நகரங்களில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியானதன் பின்னணி இதுதான். சில ஆயிரம் ரூபாய்களைப் பிடித்தனர். ஆனால், பிடிபடாதது எத்தனை லட்சங்களோ?
அதுமட்டுமல்ல..! இலங்கையில் இருந்து ஹவாலா முறையில் பணம் கடத்தல் பிசினஸில் பலரையும் இறக்கிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்கள். அந்த வகையில், சென்னை விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து இறங்கினார். அவரின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அப்போதைய கூடுதல் எஸ்.பி-யான ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தபோது, புற்றுநோய் கட்டிகளைப் போல் வயிற்றில் பல கட்டிகள் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். பேதி மருந்தைக் கொடுத்தபோது, அந்த புற்றுநோய் கட்டிகள் ஒவ்வொன்றும் ரத்தின, மரகதக் கற்களாக வெளிவந்தன. மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரத்தினக் கற்களை சென்னையில் ஒரு முக்கிய புள்ளியிடம் ஒப்படைக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் இலங்கை வி.ஐ.பி-கள் இருவர்.
கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களைத் தயார் செய்து அனுப்புவது போன்ற நாசகர வேலைகளை செய்யும் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் தலைமைச் செயலகம் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே முன்பு இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் தனது பிராஞ்சைத் துவங்கிவிட்டது. இப்போது இலங்கைக்கான பாகிஸ்தான் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கிய அதிகாரியாக இருப்பவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர்கள். அவர்களில் சிலர், தென் தமிழகத்தில் எப்படியெல்லாம் ஊடுருவலாம் என்பது பற்றி ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார்கள். அவர்களது கண் அசைவில் தமிழகத்துக்குள் ஸ்லீப்பர் செல்கள் ஏஜென்ட்கள் தயார் செய்து தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த வகையில், 2012-ம் ஆண்டு திருச்சியில் பிடிப்பட்டார் தமீம் அன்சாரி. அதிராம்பட்டினத்தைப் பூர்வீகமாக கொண்ட இவர்தான் முதன்முதலில் இலங்கையில் ஐ.எஸ்.ஐ-யின் உயர் அதிகாரிகளின் பெயர்களைச் சொன்னார். அவர்களின் வழிகாட்டுதல்படி, தமிழகம் மற்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகளைப் பற்றிய புகைப்படங்களை இ-மெயில், சி.டி-கள் மூலம் இலங்கைக்கு அனுப்ப முயன்றிருக்கிறார். அவரை, சில மாதங்கள் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்த இந்திய உளவுத் துறை அதிகாரிகள், ஒரு கட்டத்தில் திருச்சியில் வைத்து பிடித்தனர். தமீம் அன்சாரிக்கு அடுத்து இப்போது அதே பாணியில் சதி வேலையில் சிக்கி பிடிபட்டிருப்பவர்தான் முகமது ஜாகீர் உசேன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். திருமணம் ஆனவர்.
ஜாகீர் உசேன் எப்படி ஐ.எஸ்.ஐ-யின் பிடியில் சிக்கினார் என்பது பற்றி சென்னையில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''தமீம் அன்சாரி வெங்காய ஏற்றுமதி பிசினஸுக்காக இலங்கைக்குப் போயிருக்கிறார். அப்போது அவருடன் பிசினஸில் உதவுவதாக நண்பர் ஒருவர் சொல்லி இன்னொருவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர்தான், ஐ.எஸ்.ஐ-யின் ஏஜென்ட். இந்த ஆள் சொன்ன அசைன்மென்ட்களை செய்துகொடுத்திருக்கிறார் அன்சாரி. அதில் அவர்கள் திருப்தி அடையவே, அடுத்தடுத்து விசாகப்பட்டினம் நீர்மூழ்கி தளம், வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையம், தூதுரக அலுவலங்கள் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவைகளை தமீம் அன்சாரி அனுப்ப முற்பட்டபோது, நாங்கள் சுற்றிவளைத்தோம். எல்லா ஆதாரங்களையும் சேகரித்த பிறகுதான், தமீம் அன்சாரியைப் பிடித்தோம். இப்படியாக தமிழகத்தைச் சேர்ந்த 18 நபர்களை ஸ்லீப்பர் செல்லாக ஆக்க மூளைச் சலவை செய்து வைத்திருந்தனர்.
ஐ.எஸ்.ஐ-யின் இன்னொரு ஏஜென்ட், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட  இளைஞர்கள் 65 நபர்களைத் தேர்தெடுத்து ஸ்லீப்பர் செல்லாக மாற்றி வருகிறார் என்றும், அவர்களை அடுத்தடுத்து தமிழகத்துக்குள் அனுப்பி வைக்கப்போகிறார் என்றும் கேள்விப்பட்டோம். நாங்கள் எங்களின் சோர்ஸ்களை உசுப்பிவிட்டு தகவலுக்காகக் காத்திருந்தோம். அப்படி வந்த ஒரு தகவலில்தான் ஜாகீர் உசேனை ஃபிக்ஸ் செய்தோம். ஏற்கெனவே போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானவர் இவர். பிறகு, இலங்கைக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே, சுற்றுலா விசாவில் அடிக்கடி தமிழகத்துக்கு வந்துபோனார். ஒவ்வொரு முறையும் அவரின் செயல்பாடுகளைக் கண்காணித்தோம். சென்னையில் தூதரக அலுவலகங்கள், கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளம்... ஆகிய ராணுவ அதி முக்கிய இடங்களுக்கு விசிட் போனார். அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஜாகீர் உசேன் கூடவே உளவுத் துறை அதிகாரிகள் டீம் மாறுவேடத்தில் சுற்றிவந்தனர். அவர் இலங்கையில் ஐ.எஸ்.ஐ-யின் ஏஜென்ட்களுடன் சேட்டிலைட் போனில் அடிக்கடி பேசினார். அவரை இலங்கையில் இருந்து ராஜ உபசரிப்புடன் சென்னைக்கு அனுப்பி வைத்ததே அங்குள்ள அதிகாரிகள்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் சிக்கி உள்ளன. ஜாகீர் உசேன், தமிழகத்தில் உள்ள சில ஸ்லீப்பர் செல் ஆட்களைச் சந்தித்தார். இதுபோன்ற ஆதாரங்களை முழுவதுமாக சேகரித்து முடித்த பிறகு, உளவாளி ஜாகீர் உசேனை திருவல்லிக்கேணியில் வைத்து பிடித்தோம். முக்கியமாக, பெங்களூரை மையமாக வைத்து பல்வேறு முக்கிய இடங்களில் குண்டுவைத்து தகர்க்க வரைபடங்களைத் தயார் செய்திருந்தார் ஜாகீர் உசேன். அது தொடர்புடைய முக்கிய நபர்களைத் தேடி வருகிறோம். ஜாகீர் உசேன் மட்டுமல்ல... மேலும் 81 நபர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களில் பலர் இலங்கையில் இருக்கிறார்கள். 17 பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இனியாவது தாங்கள் செய்வது தேச துரோகம், உளவு வேலை என்பதை உணர்ந்து திருந்தினால் நல்லது. இல்லை என்றால், எந்தநேரமும் அவர்களை பிடிக்கத் தயங்க மாட்டோம்'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் சிலரிடம் பேசியபோது, ''ஏற்கெனவே தமீம் அன்சாரி கைது விவகாரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். அதையெல்லாம் மேற்கோள் காட்டித்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி விடுவிக்கப்பட்டார். முழுவதுமாக விடுபட சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். இப்போது ஜாகீர் உசேனைப் பிடித்ததாக போலீஸார் சொல்கிறார்கள். அதன் பிறகுதான் ரயிலில் குண்டு வெடித்துள்ளது. சொல்லி வைத்ததுபோல, நடக்கும் இந்த விவகாரங்கள் உளவுத் துறை நடத்தும் நாடகம்தான். இந்த விஷயத்தில் நாங்கள் மேலும் சில தகவல்களை சேகரித்து வருகிறோம். தமீம் அன்சாரி விவகாரம் போலவே ஜாகீர் உசேன் விவகாரமும்  ஜோடனை செய்யப்பட்ட ஒன்றாகத்தான் கருதுகிறோம். சில நாட்கள் கழித்து கருத்து சொல்கிறோம்'' என்றனர்.
இது பற்றியும் உளவுத்துறையினரிடம் கருத்து கேட்டோம்.
''முழுக்க முழுக்க ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்'' என்றனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அரசியல்ரீதியான காரணங்கள் வெளியாகி கிறுகிறுக்க வைக்கின்றன!
- கனிஷ்கா
அட்டைப் படம்: ஆ.முத்துக்குமார்
படங்கள்: ப.சரவணகுமார்
 வெடிகுண்டு வைக்கப்பட்டது எங்கே?
பெங்களூரு எக்ஸ்பிரஸில் வெடித்த குண்டு, சென்னையில் அந்த ரயில் நிற்கும்போது வைக்கப் பட்டதாக சிலர் சொல்கிறார்கள். ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட அந்தப் பெட்டியில் பயணிகள் இருந்திருப்பார்கள். அதில் ரிசர்வ் செய்யாத ஒருவர் புதிதாக ஏறி சீட்களுக்கு அடியில் குண்டு வைத்துவிட்டு இறங்குவது எளிதான காரியம் அல்ல. அதனால், வெடிகுண்டு வைத்தது சென்னையில் நடந்திருக்காது. பெங்களூரிலேயே இந்த குண்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, வரும் வழியில் வைத்திருக்க வேண்டும். ரயில் சென்னை வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படவில்லை என்றால், இந்தச் சம்பவம் ஆந்திர எல்லையில் நடந்திருக்கும்.
       - ஸ்டாலின்
  வெடிகுண்டு சத்தம்... பொதுமக்களின் ஓலம்!
 அடுத்ததுத்து வரும் விடுமுறை நாட்களை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பலரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அப்போதுதான் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே போர்ட்டர் பாலாவிடம் பேசினோம். ''பெங்களூரில் இருந்து கவுஹாத்தி செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ், வழக்கமாக அதிகாலை 5.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும். ஆனால், வழியில் கிராஸிங் இருந்ததால், ஒரு மணி நேரம் தாமதமாக 6.40-க்கு வந்தது. உடனடியாக துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டிருந்தனர். பயணிகளில் பலர் பெட்டிகளில் ஏறி அமர்ந்துவிட்டனர். அப்போதே நேரம் 7.25 மணி இருக்கும். அந்த நேரத்தில் எஸ் 4 மற்றும் எஸ் 5 கோச்களில் அடுத்தடுத்து டயர் வெடிக்கும் சத்தத்தைப்போல் வெடிச்சத்தம் கேட்டது. அதையடுத்து பயணிகள் சிலரின் ஓலமும் கேட்டது. உடனடியாக மற்ற பயணிகள் அனைவரும் ஓடிவிட்டனர். எங்களுக்கும் அந்தப் பெட்டிக்கு பக்கத்தில் போவதற்கு பயமாக இருந்தது. ரயில்வே போலீஸ், லோக்கல் போலீஸ், ரயில்வே ஆம்புலன்ஸ் என அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட பெட்டிகளுக்குள் சோதனை நடத்தியபோது
எஸ் 4 பெட்டியிலும், எஸ் 5 பெட்டியிலும் வெடிகுண்டு வெடித்து இருந்தது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் ரத்தக் காயத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போதே, ஸ்வாதி என்ற பெண் பயணி இறந்துவிட்டார். மற்றொருவருக்கு இரண்டு கால்களும் பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது'' என்றார்.
-ஸ்டாலின், மகேஷ்
 பாவம் ஸ்வாதி!
வெடிகுண்டு விபத்தில் இறந்துபோன ஸ்வாதியின் முழுப்பெயர் ஸ்வாதி பரச்சூரி, இவர் ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். பெங்களூரில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்தார். விடுமுறைக்காக பெங்களூரில் இருந்து குண்டூருக்குச் சென்றார். ரயிலில் குண்டு வெடித்தபோது, அவரது கழுத்துப் பகுதியில் பயங்கரமாக காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
-சிபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக