சனி, 3 மே, 2014



குண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா முதல்வர் -கருணாநிதி 
சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை குண்டு வெடிப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குண்டுவெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத்தாக்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில் 1998-ம் ஆண்டு கோவையில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998–ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது, முதல்–அமைச்சர் என்ற முறையில், நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.
14–2–1998 அன்று அதாவது தமிழகத்தில் 16–ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மறுநாள், 15–2–1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன். என்னுடன் த.மா.கா. தலைவராக இருந்த மூப்பனாரும் வந்தார். மேலும் அன்றைய தலைமைச் செயலாளர் கே.ஏநம்பியார், சிறப்புத் தலைமைச்செயலாளர் ஏ.பி.முத்துசாமி, காவல்துறைத் தலைமை இயக்குனர் எப்.சி.சர்மா, மற்றும் உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம், ஐ.ஏ.எஸ். ஆகிய அதிகாரிகளையும் உடன் அழைத்துச்சென்றேன்.
ஆறுதல் கூறினேன்
கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன். அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும், காயமுற்றவர்களுக்கு, அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச்செய்தேன்.
விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘‘கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் கருணாநிதி பதவி விலகவேண்டும்’’ என்று கோரினார். மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது, ‘‘தி.மு.க. ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக்கூட உத்தரவாதமில்லை’’ என்றார். மானாமதுரையில் பேசும்போது, ‘‘குண்டு வெடிப்புச்சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை, இதைச்செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா?’’ என்று கேட்டார்.
தற்போது நான் அப்படியெல்லாம் கூடப்பேசவில்லை. என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால், இந்தக்குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா; எனவே காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தேன். இதைத்தான் தவறு என்று கூறி முதல்–அமைச்சர் அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.
சென்னை வந்திருக்க வேண்டாமா?
நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால், 98–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கோவை குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே, அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா? முதல்–அமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா?
கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே, என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், முதல்–அமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுபவர்களையெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே, அவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?
இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக