சனி, 3 மே, 2014

உணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி 
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மத்தியமுகாம் 2ல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டோர் உட்கொண்ட உணவு நஞ்சானத்தில் 60 பேருக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று மத்தியமுகாம் 2 இல் அமைந்துள்ள வீடொன்றில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.
இந்த வீட்டில் உணவருந்திச் சென்ற 60க்கும் மேற்பட்டோருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
அங்கு அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சையினை அளிப்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும், அம்பாறை வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிசார் அங்குள்ள உணவு, தண்ணீர், ஐஸ்கிறீம் போன்ற உணவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
இதுதொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
வைத்தியசாலையில் தற்போது 53 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கான சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள அவசர சிகிச்சை பிரிவினை தவிர ஏனைய தாதியர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.
அவ்வாறு இருந்தபோதும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து தாதியர் உத்தியோகஸ்த்தர்களும் வேலை பகிஷ்கரிப்பினையும் பொருட்படுத்தாது சிவில் உடையுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்து அவசரமாக அனுமதிக்கப்பட்ட 53 பேருக்குமான சிகிச்சைகளை தற்போதும் செய்து கொண்டு வருகின்றார்கள்.
நோயாளர்களின் நலன்கருதி தங்களது வேலைநிறுத்தத்தினையும் பொருட்படுத்தாமல் இவ்வாறான நேரத்தில் தங்களது கடமையை மேற்கொள்வது மிகவும் பாராட்டிற்குரியது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக