இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் தமிழர்கள் 5 கி.மீ. நடைப் பயணம்
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு நிதி திரட்ட அமெரிக்க தமிழர்கள் 5 கிலோ மீட்டர் நடைப் பயண நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
அமெரிக்காவில் தமிழர்கள் பெருமளவில் வசித்து வரும் நகரங்களில் ஒன்றான டல்லாஸ் மாநகரத்தின் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மே 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கை, வன்னிப் பகுதியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக செலவிடப்படுகிறது.
இது குறித்து தமிழ்ச் சங்க தலைவர் கீதா அருணாச்சலம் விடுத்துள்ள வேண்டுகோள்:
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சார்பில், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், தமிழ் மொழி வளர்ச்சி, விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட அம்சங்களையும் வலியுறுத்தும் விதமாக விழாக்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
சனிக்கிழமை, மே 10ம் தேதி காலை 8.30 மணி முதல் 11மணிவரை, இயற்கை கொஞ்சும் ப்ளேனோ Hoblitzelle பூங்காவில், 5 கிலோ மீட்டர் நடை/ஓட்டப் பயணத் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியை 'முதுகுத் தண்டுவட குறைபாட்டுடன்' நடக்க இயலாமல் இருக்கும் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கான IMHO USA, (a US based nonprofit - 501(c)(3) org, www.theimho.org), அமைப்பின் திட்டங்களுக்கு அளிக்க இருக்கிறோம்.
உடலுக்கு உற்சாகம் மற்றும் சமூக சேவைக்கு பங்களிப்பு என இரு நன்மைகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்,' என்று அவர் கூறியுள்ளார்.
கூடினோம், கலந்து பேசினோம், விருந்துண்டோம் என்று மட்டுமில்லாமல், உடலுக்கு பயிற்சி, நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் மற்றும் சமூக சேவை என அனைத்தையும் ஒருங்கிணைத்து இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் அமெரிக்கத் தமிழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக