2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை
சித்ரதுர்கா மாவட்டம் ஹொழல்கெரே தாலுகா குஞ்சிகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளம்மா (வயது 35). இவர்களுக்கு பிரியா (13), கீர்த்தி (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. சிவண்ணா தினமும் மதுபானம் அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்வதும், சம்பளத்தை சரிவர வீட்டில் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஞ்சுளம்மா, அவரது மகள்கள் கீர்த்தி, பிரியா ஆகியோர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிக்கஜாஜுர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கீர்த்தி, பிரியா இருவரையும் தூக்குப்போட்டு கொலை செய்து விட்டு, மஞ்சுளம்மா தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய சோதனையில், மஞ்சுளம்மா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் மஞ்சுளம்மா கூறியிருப்பதாவது:–
எனது கணவர் சிவண்ணா அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி இருக்கிறார். நான் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், எனது கணவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது அந்த ஆசை நிறைவேறாது என்று தெரிகிறது.
இதனால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு விட்டேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இனிமேலாவது எனது கணவர் கடனை எல்லாம் அடைத்து விட்டு நன்றாக வாழட்டும். அவருக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுக்கட்டும். இவ்வாறு கடிதத்தில் மஞ்சுளம்மா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிக்கஜாஜுர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரின் செயல்பாடுகளால் வேதனை அடைந்து, பெண் ஒருவர் தனது மகள்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குஞ்சிகனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக