வியாழன், 1 மே, 2014சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெயிலில் குண்டுகள் வெடித்தன; பெண் பலி 14 பேர் படுகாயம்

தினமும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்திக்கு சென்னை வழியாக வாரம் 3 முறை (புதன், வியாழன், வெள்ளி) கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12509) இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து வழக்கமாக சென்னை சென்டிரலுக்கு காலை 5.40 மணிக்கு வரும் இந்த ரெயில், மீண்டும் 6.20 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட்டு செல்லும்.
பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில், 1லு மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.05 மணிக்கு புறப்பட்டது. சுமார் 6 மணி நேர பயணத்திற்கு பிறகு, நேற்று காலை 7.05 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள 9-வது பிளாட்பாரத்தை அந்த ரெயில் வந்தடைந்தது.
ரெயிலில் குண்டுகள் வெடித்தன
ரெயில் நின்றதும் சென்னையை சேர்ந்த பயணிகள் இறங்கியபடி இருந்தனர். மற்ற பயணிகள் டீ, காபி குடித்தபடி யும், பிளாட்பாரத்தில் நின்று பேசிக்கொண்டும் இருந்தனர்.
அப்போது, திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் காலை 7.20 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட எஸ்-4 முன்பதிவு பெட்டியில் ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித் தது. அடுத்த சில வினாடிகளில் அருகில் இருந்தஎஸ்-5 பெட்டியில் மற்றொரு குண்டு வெடித்தது.
எஸ்-4 பெட்டியில் வெடித்த குண்டு அதில் உள்ள 70-வது இருக்கைக்கு அடியிலும், எஸ்-5 பெட்டியில் 30-வது இருக்கைக்கு அடியிலும் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. குண்டு வெடித்த அதிர்ச்சியில் அந்த பகுதி சிதைந்தது.
பயணிகள் ஓட்டம்
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் சென்டிரல் ரெயில் நிலையமே அதிர்ந்தது. குண்டு வெடித்த பெட்டிகளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடிவந்தனர். மற்ற பெட்டிகளில் இருந்தும் பயணிகள் ஓட்டம் பிடித்தனர். பிளாட்பாரத்தில் இருந்தவர்களும் உயிர் பிழைக்க ஓடினார்கள்.
மற்ற பிளாட்பாரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாக தெரியாமல் பதற்றம் அடைந்தனர். இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், சென்னை மாநகர போலீசாரும் குண்டு வெடித்த பிளாட்பாரத்தில் குவிக்கப்பட்டனர். ரெயில்வே அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
பெண் என்ஜினீயர் பலி
இந்த குண்டு வெடிப்பில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அதே இடத்தில் பலியானார். ரத்த சேற்றில் கிடந்த அவரது உடலை டிராலி வண்டியில் வைத்து அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். மேலும், காயம் அடைந்த 14 பேரை ஆம்புலன்ஸ் வேன் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குண்டு வெடிப்பில் பலியான இளம்பெண் யார்? என்று உடனடியாக அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் சுவாதி (வயது 24). ஆந்திர மாநிலம் குண்டக்கல் அவரது சொந்த ஊர் ஆகும். திருமணம் ஆகாத இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பெங்களூரில் இருந்து சுவாதி தனது சொந்த ஊருக்கு ரெயிலில் சென்ற போது தான் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகிவிட்டார்.
காயம் அடைந்தவர்கள்
குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 14 பேர் பெயர் மற்றும் ஊர் விவரம் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. மேற்கு வங்காளத்தை சேர்ந்த கிருஷ்ணா (28), 2. தினல்குமார் தாஸ் (43), 3. சரந்திரே வர்மா (31) 4. சகுன்குமார் ராய் (23), 5. ஆந்திராவை சேர்ந்த ஆஞ்சநேயலு(29), 6. முரளி லோக்நாத், 7. வடக்கு திரிபுராவை சேர்ந்த சதன் சந்திர தேட்நாத் (64), 8. சமந்தோ தேட்நாத்(37), 9. மணிப்பூரை சேர்ந்த பிஜன்குமார்(14), 10. அல்தாப் கான், 11. ஜிஜேந்திர முகந்தோ தேகா(51), 12. அசாமை சேர்ந்த உமா உமரி ஹனி (45), 13. பெங்களூரை சேர்ந்த சாரி (21), 14.கொத்வாலி பகுதியை சேர்ந்த ஷபிபுல் அகு(27).
காயம் அடைந்தவர்களில் கிருஷ்ணாவுக்கு தொண்டையிலும், சுமந்தோ தேட்நாத்துக்கு காலிலும் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
அதிகாரிகள்பார்வையிட்டனர்
குண்டு வெடிப்பு நடந்த அடுத்த அரைமணி நேரத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஷ்ரா, சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, துணை மேலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டனர்.
டி.ஜி.பி.ராமானுஜமும் சென்டிரல் ரெயில் நிலையம் வந்து குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சென்னை நகர கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், சண்முகவேல், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால், டி.ஐ.ஜி. பாஸ்கரன், சூப்பிரண்டு கயல்விழி, ரெயில்வே துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோரும் குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வழக்குப்பதிவு
சென்டிரல் ரெயில் நிலையத்தின் துணை மேலாளர் பாலசுப்பிரமணி, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். கொலை(இ.பி.கோ.302), கொலை முயற்சி(இ.பி.கோ. 307), சிறு மற்றும் கொடுங்காயங்களை ஏற்படுத்துதல்(இ.பி.கோ.325,326), வெடிகுண்டு தடுப்பு சட்ட பிரிவுகள் 3, 4, 5 மற்றும் ரெயில்வே சட்டப்பிரிவு 151 (ரெயில்வே சொத்துகளை நாசப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டி.ஜி.பி. ராமானுஜம் பேட்டி
சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்பு டி.ஜி.பி. ராமானுஜம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரெயில் பெட்டிகளில் சாதாரண ரக குண்டுகள் தான் வெடித்து உள்ளன. இதனால் தான் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படவில்லை. சென்னை நகரை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், சொல்லமுடியாது. இந்த சம்பவம் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.ஜி.பி.ராமானுஜம் தெரிவித்தார்.
தீவிர நடவடிக்கை
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஷ்ரா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். விபத்தில் இறந்த இளம்பெண் சுவாதி என்பவரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த 2 பயணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இனி இதுபோல விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறுகையில், ‘‘இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. குண்டு வைத்த சதிகாரர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக