வெள்ளி, 4 மே, 2012

ச.சொக்கலிங்கம் அதிபர்


ச.சொக்கலிங்கம் அதிபர் 
----------------------------------

புங்குடுதீவு வடக்கு பகுதியின் 7ஆம் ,8 ஆம் 9 ஆம் வட்டார மக்களின் அறிவுக்கண்ணை திறந்த அற்புதமான ஒரு ஆசான் உயர்திரு ச.சொக்கலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது .மடத்துவெளி  பாலசுப்பிரமணியரின் திருவாசல் முன்னே குடியிருந்த இந்த ஆசிரியர் பெருங்காடு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் இறுதி காலங்களில் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்து கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் .1912 இல் புங்குடுதீவில் பிறந்து அன்றைய காலத்தில் ஆங்கிலேயரால்  நேரடியாக செயல்படுத்தப்பட்ட ஆங்கிலத்தோடு ஒட்டிய தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை கற்று தேறினார் பழைய முறையிலான எஸ் எஸ் சி பரீட்சையை அப்போதைய திட்டப்படி ஆங்கிலம் தமிழ் கலந்த இருமொழி தெரிவில் எழுதி சித்தி எய்தியவர் .தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் விதிமுறைகள் கொண்டதான அந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்றவர் .கணிதம் தமிழ் சமயம் ஆங்கிலம் என்பவற்றை முறைப்படி கற்பிக்கும் ஆற்றலும் கொண்டவர்.கிராம மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்கள் தவிர மாலை நேரத்திலும் மேலதிகமாக  வகுப்புக்களை நடத்தி விசேசமான  பரீட்சைகளில் தேர்வு பெற காரணமாக இருந்தவர் . புலமைப் பரிசல் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவதில் வல்லவாராக திகழ்ந்தார் இதற்கெனவும் மாலை நேர வகுப்புகளை திறம்பட  நடத்தினார் .இவரது விடாமுயற்சிக்கு பலனாக இவரது மாணவனான சிவ-சந்திரபாலன் 7 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது .இவர் அதிபராக இருந்த காலத்தில் தான் கமலாம்பிகை வித்தியாலயத்தின் மத்தியில் உள்ள கட்டிடம்  தெற்கே உள்ள கட்டிடம்  .விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன முற்று முழுதாக  அமைக்கப் பட்டு மகா வித்தியாலயம் என்ற  தரத்துக்கு இப்பாடசாலை தரமுயர்த்த கூடியதாக இருந்தது .பாடசாலை கிணற்றினையும் மலசலகூடத்தினையும் புதிதாக அமைத்தார் . பாடசாலை  சுற்றி வரவுள்ள பாதுகாப்பு வேலிகளை முழுவதுமாக அடைத்து வந்தார் .பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் என்பவற்றோடு கூடி திட்டங்களை வகுத்து பல  அரிய பணிகளை செவ்வனே  நிறைவேற்றி வந்தார்  பாடசாலை விளையாட்டு போட்டியினை வருடாவருடம்  நடத்த ஆரம்பித்து வைத்து வித்திடவரும் இவரே .பாடசாலைக்கு வழங்கபட்ட காலை ஆகாரமான பால் விநியோகத்தையும் தனது இல்லத்திலேயே  நடத்த ஒத்துழைத்து இடம் வழங்கி வந்தார் 1971 இல் கமலாம்பிகையில் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார் .
இவர் சமூக சேவையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சமூகத்துக்கே ஒரு வழிகாடியாக வாழ்ந்து வந்தார் .புங்குடுதீவில் புகழ் பெற்று விளங்கு முயர் தரத்திலான மடத்துவெளி சனசமூக நிலையத்தினை திரு ஐயாத்துரை ஆசிரியரோடு இணைந்து 1959 இல்  ஸ்தாபித்து வைத்த பெருமைக்குரியவர்  ஆரம்பத்தில் கமலாம்பிகை வளவிலும் பின்னர் இந்த பாடசாலை கட்டிடத்திலும் அமைத்து சேவையாற்றியவர் .
ஒய்வு பெற்ற போது ஓய்ந்திடாது கிராமத்து பஞ்சாயத்து தலைவராக இருந்து  ஏராளமான பிணக்குகளை இலகுவாக நீதியாக தீர்த்து வைத்து மக்களின் அபிமானத்தை பெற்றார்
தனியே கல்வி அறிவு மட்டும் அன்றி சாஸ்திர கலை காணி  அளவிடும் அறிவு என்பவற்றையும் கற்று மக்களுக்கு சேவை புரிந்து வந்தார் .தனது 83 ஆவது  வயதில் இவர் பூதவுடலை நீத்தார் .இவரது சேவையும் புகழும் என்றும் எம்மக்கள் மனதில் நின்று நிலைக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக